Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாட்டில் ரூ. 2,500 கோடி முதலீட்டில் ‘ஐபோன்’ உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை… ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு!

வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ‘மதர்சன்’ குழுமம், தமிழகத்தில் ‘ஐபோன்’ உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை ஒன்றை அமைக்க இருக்கிறது.

ஸ்மார்ட்போன் கண்ணாடியின் முன்னணி உலகளாவிய சப்ளையராக திகழும் ஹாங்காங்கைச் சேர்ந்த BIEL Crystal எனும் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் ஆப்பிள் சப்ளை செயின் நெட்வொர்க்கில் இணைய உள்ளது ‘மதர்சன்’ குழுமம். அதன் ஒரு பகுதியாகவே தமிழகத்தில் தனது ஐபோன்’ உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையை ‘மதர்சன்’ குழுமம் அமைக்க உள்ளது.

ரூ. 2,500 கோடி முதலீடு

ஐபோனுக்கு தேவையான கண்ணாடி திரைகளை தயாரிக்க, கிட்டத்தட்ட 2,000 முதல் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில், இந்த நிறுவனம் தமிழகத்தில் ஆலை அமைக்க உள்ளது. இதையடுத்து, ‘டாடா’ குழுமத்துக்கு அடுத்தபடியாக, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் வினியோக தொடரில் இணைந்துள்ள இந்தியாவைச் சேர்ந்த இரண்டாவது பெரிய குழுமமாக உருவெடுத்துள்ளது மதர்சன்.

தற்போது ஐபோன்களுக்கான மூன்றில் இரண்டு பங்கு கண்ணாடி திரைகளை தயாரித்து வழங்கி வரும் BIEL Crystal நிறுவனத்துடன் இணைந்து அமைய உள்ள இந்த ஆலையின் 51 சதவீத, அதாவது பெரும்பான்மை பங்குகளை மதர்சன் குழுமமே வைத்திருக்கும்.

இந்நிலையில், உலகளவில் புவிசார் அரசியல் பிரச்னைகள் அதிகரித்து வருவதால், ரிஸ்க்குகளை குறைக்கும் விதமாக, தனக்கு உதிரிப் பாகங்கள் வழங்கும் நிறுவனங்களிடம் தயாரிப்பு ஆலைகளை விரிவுபடுத்துமாறு, ஆப்பிள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து இந்தியா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு தயாரிப்பு ஆலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு

அதன் ஒரு பகுதியாகவே, தற்போது தமிழகத்தில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் நுகர்வோர் மின்னணுவியல் பிரிவு, நடப்பு காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்றும், 2025 ஆம் ஆண்டு பிற்பாதியில் உற்பத்தியை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உற்பத்தி தொடங்கப்பட்டால், அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உற்பத்தியை தொடங்கிய நான்கு அல்லது ஐந்தாண்டு காலத்துக்குள் இதன் டர்ன் ஓவர் ரூ. 8,000 முதல் 8,500 கோடியாக உயரும் என்றும் மதர்சன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Exit mobile version