Amazing Tamilnadu – Tamil News Updates

அதிக தொழிற்சாலை, வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம்!

தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன், மதிப்பு கூட்டுதல், வேலைவாய்ப்பு, மூலதன உருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில், அவற்றின் அமைப்பு மற்றும் வளர்ச்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்த விரிவான தகவல்களை தெரிவிக்கும் நோக்குடன், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2022-23 ஆம் நிதியாண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் ஒரு கோடியே 84 லட்சத்து 94,962 வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் முன்னணியில் உள்ள முதல் 5 மாநிலங்கள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. அதில் 15 சதவீத பங்களிப்பை வழங்கி தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2022-23 ஆம் ஆண்டில் தமிழகம் 27 லட்சத்து 74,244 வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.

அதற்கு அடுத்த 4 இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளன. இந்த 5 மாநிலங்கள் மட்டும் உற்பத்தி துறை சார்ந்த வேலைவாய்ப்பில் சுமார் 55% பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் 15.66 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக 12.25 சதவீதத்துடன் குஜராத் இரண்டாவது இடத்திலும், 10.44 சதவீதத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும், 7.54 சதவீதத்துடன் உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்திலும், 6.51 சதவீதத்துடன் ஆந்திரா ஐந்தாவது இடத்திலும் உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

இந்நிலையில், இந்த ஆய்வறிக்கை குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இது திராவிட மாடலுக்கு கிடைத்த மற்றுமொரு மணிமகுடம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “இந்திய ஒன்றியத்திலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடம் என்றும் ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழில் கொள்கையின் நீட்சியும், நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சியும் இப்போது நல்ல விளைச்சலை தந்துக் கொண்டிருக்கின்றன.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியால் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக 2030ஆம் ஆண்டுக்குள் உயர்த்திடுவதற்கான பணிகள் நம் திராவிட மாடல் அரசால் தொடரும், உயரும்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version