தமிழகம் முழுவதும் பரவலாக வருகிற 14ம் தேதி வரை திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழை முறையாக எப்போது முதல் தொடங்க உள்ளது என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
கேரளா மற்றும் தென் தமிழகத்தின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக 14 ஆம் தேதி வரை மழை நீடிக்கும். திருநெல்வேலி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
முன்னரே தொடங்கும் வடகிழக்குப் பருவ மழை
இந்த நிலையில், வடகிழக்குப் பருவ மழை முறையாக எப்போது முதல் தொடங்க உள்ளது என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. பொதுவாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3 ஆவது வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்தாண்டு 9 நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது அக்டோபர் 17 ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிரதான மழைபொழிவுக்கு வகை செய்யும் தென்மேற்குப் பருவமழை இந்த வாரம் விடைபெற்றுவிடும். அதன்பிறகு காற்று திசை மாற்றம் காரணமாக வடகிழக்குப் பருவமழை தொடங்கும். வடமாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும். இருப்பினும், மாநிலத்தின் மத்திய பகுதிகளில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரள மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்பப் பகுதிகள் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும். அக்டோபர் மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும்.
அக்டோபர் முதல் டிசம்பர் இறுதி வரை நீடிக்கவுள்ள வடகிழக்குப் பருவமழையின்போது பொதுவாக தமிழகத்தில் சராசரியாக 44 செ.மீ மழை பெய்யும். இந்தாண்டு மழைப்பொழிவு லா நினாவின் சாத்தியமான தாக்கத்தைப் பொறுத்து அமையும் என வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழகத்தில் 1940 மற்றும் 2021-க்கும் இடையே 42 முறை லா நினா நிகழ்வுகளின்போது 69 சதவீத சதவீத அதிக மழை பெய்துள்ளது. லா நினா ஏற்பட்ட 2010, 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், 2010 மற்றும் 2023 ல் அதிக மழையும், 2016ல் குறைந்த மழையும் பெய்தது குறிப்பிடத்தக்கது.