வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அவரது தலைமையிலான அரசு பல்வேறு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில், கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களைச் சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அதிகாரிகள் குழுவும் அமெரிக்கா செல்கிறது. இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.
ஆகஸ்ட் 29 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் “இன்வெஸ்டார் கான்கிளேவ்” மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த நிகழ்வுகளை முடித்த பின்னர், செப்டம்பர் 2 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிக்காகோ செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 7 ஆம் தேதி சிகாகோவில் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் மற்றும் அமெரிக்காவின் தமிழ்ச்சங்கங்கள் இணைந்து நடத்தும், ‘வணக்கம் அமெரிக்கா’ என்ற சிறப்பு நிகழ்ச்சியான மாபெரும் கலாசார விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். செப்டம்பர் 12 ஆம் தேதிவரை அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்கவும், முதலீடுகளை செய்யவும் அழைப்பு விடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12 ல் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.