தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவில்லையென்றால் மத்திய அரசின் கல்வி நிதி கிடையாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் தொடர்ந்து கூறி வருவதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இருப்பினும் இந்த விவகாரத்தில், மாநிலத்தில் ஆளும் திமுக, மத்தியில் ஆளும் பாஜக இடையே தான் கடும் மோதல் நிலவி வருகிறது. இருதரப்பினரும் எக்ஸ் சமூகவலைதளத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக – பாஜக மல்லுக்கட்டு
முதலில் திமுக தரப்பில் ‘கெட்-அவுட் மோடி’ என்ற ஹேஷ்டேக், எக்ஸ் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆனது. திமுக ஆதரவாளர்களும் திமுக ஐடி விங்கும் இதை மிகத் தீவிரமாக முன்னெடுத்ததால் பாஜகவினர் ஆத்திரமடைந்தனர்.
தமிழகத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாதது குறித்து விமர்சித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் இனி Go Back மோடி என சொல்ல மாட்டோம் Get Out மோடி என்று தான் சொல்வோம்” எனக் காட்டமாக கூறி இருந்தார்.
இதற்கு நகரூரில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,”உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன். நீ சரியான ஆளாக இருந்தால், உன் வாயில் இருந்து Get Out மோடின்னு சொல்லிப்பாரு, எங்கப்பா முதலமைச்சர், தாத்தா ஐந்து முறை முதலமைச்சர், நான் துணை முதல்வர் என்று சொல்லிப்பாரு பார்க்கலாம். ,வெளியே போ மோடி’ என்று சொல்வாராம். சொல்லி பாரு பார்க்கலாம்” எனக் கூறினார்.
இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. அண்ணாமலை, பிரச்னையை திசை திருப்ப பார்க்கிறார்.அண்ணாமலை ஏற்கனவே அறிவாலயத்தை முற்றுகையிட போகிறேன் என்று கூறினார். வேண்டுமென்றால் அடுத்து நான் அண்ணாசாலை செல்கிறேன். அங்கு வர சொல்லுங்கள்” எனக் கூறினார்.
Get Out மோடி Vs Get Out ஸ்டாலின்

இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “அண்ணாசாலையில் எங்கே என்று சொல்லுங்கள். நான் தனியாக வருகிறேன். என்கூட பாஜக தொண்டன் ஒருவன் வரமாட்டான். நீங்கள் உங்கள் தொண்டர் படை, காவல்துறை கொண்டு முடிந்தால் என்னை தடுத்தி நிறுத்தி பாருங்கள். திமுககாரங்களுக்கு ஒரு சவால், இன்று ( நேற்று) இரவு முழுக்க கூட நீங்க Get Out மோடி எனப் பதிவிடுங்கள். நாளை காலை 6 மணிக்கு நான் Get Out ஸ்டாலின்-னு ட்வீட் போடுவேன். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ஸ்டாலின் நீங்க தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என பதிவிடுவேன்” எனக் கூறி இருந்தார்.
அதன்படி, பாஜகவினர், இன்று காலை முதல் ‘கெட்-அவுட் ஸ்டாலின்’ என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிடத் தொடங்கிய நிலையில், அது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
மீண்டும் பிடிவாதம் காட்டும் தர்மேந்திர பிரதான்
இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மும்மொழி கல்விக்கொள்கையை ஏற்காததை காரணம் காட்டி தமிழகத்துக்கான கல்வி நிதி மறுக்கப்படுவது நியாயமற்றது என்றும், தமிழகத்துக்கு ஏன் புதிய கல்விக் கொள்கை தேவையில்லை என்பதை விளக்கியும் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தார்.
இதனையடுத்து, “கல்வியை அரசியலாக்க வேண்டாம். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராயுங்கள்.தேசிய கல்விக் கொள்கை (NEP)2020 என்பது வெறும் சீர்திருத்தம் மட்டுமல்ல, இந்தியாவின் கல்வி முறையை உலகளாவிய தரத்துக்கு உயர்த்தும் நோக்கம் கொண்டது. மேலும், நமது மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாத்து வலுப்படுத்தி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வை அது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று கடிதம் எழுதி உள்ளார்.
இதனையடுத்து, மத்திய அமைச்சர் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள்? மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம். இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது? மொழிப்போரில் பல உயிர்களை கொடுத்த மண் தமிழ்நாடு. யார் அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும், மக்களின் வரிப்பணத்தையே மத்திய அரசிடம் கேட்கிறோம்”என்று கூறினார்.
தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றே தீருவது என ஆளும் திமுகவும், மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய அரசும் பாஜகவும் மல்லும் கட்டும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.