தமிழகத்துக்கு கல்வி நிதி மறுப்பு… வரிந்து கட்டும் திமுக … கைகோத்த கூட்டணி கட்சிகள்!

தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால்தான், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த பிரச்னையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஆளும் திமுக தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, ‘சமக்ரசிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு நிதி பெற சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாமா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் ஒருபுறம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இது குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களுடனும் திமுக தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சட்ட ரீதியான நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும், முதலில் அரசியல் ரீதியான போராட்டத்தை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்து கல்வி நிதி தர முடியும் என நிர்பந்திப்பது ஆகியவற்றைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கூறிய கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், ” தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார்.

தர்மேந்திர பிரதான்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார். பதவிக் காலம் முடிந்து போன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள்; யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள்; தொடர்ச்சியான திராவிட – தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள்; மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பது மோடி அரசின் கண்களுக்கு உறுத்துகிறது. அதனால் தான் அரசியல் ரீதியாகப் பாஜக-வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது பாஜக வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.

இவ்வாறு வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும். எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும். அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாட்டிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்கக் குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம்! உரக்கக் குரல் எழுப்புவோம்!! உரிமைகளை மீட்போம்!!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» sağlıklı dişler için bunlardan uzak durun !. So if you want to charter your luxury yacht with a crew or bareboat sailing yacht, be sure to. hest blå tunge.