“Google Translate, Chat GPT, AI கோலோச்சுகிற காலத்தில் மும்மொழி திணிப்பு ஏன்?”

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மத்திய அரசு கட்டாயப்படுத்துவதற்கு எதிரான கருத்துகளை தமது கட்சியினருக்கு எழுதும் கடிதம் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு கோலோச்சுகிற இன்றைய காலகட்டத்தில் மும்மொழி திணிப்பு ஏன் எனக் கேள்வி எழுப்பி ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “
செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னேற்றமும், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எழுத்தாகவும் குரலாகவும் மாற்றக்கூடிய வாய்ப்பும் எளிய முறையில் எல்லாரும் பயன்படுத்தும் வகையிலான மென்பொருள்கள் கைபேசிகளிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
Google Translate, Chat GPT, Artificial Intelligence போன்ற தொழில்நுட்பங்கள் மொழிச் சிக்கல்களை மனிதர்கள் எளிதாகக் கடப்பதற்கு உதவுகின்றன. அச்சிடப்பட்ட காகிதத்தைப் படம் எடுத்து, அதை இன்றுள்ள தொழில்நுட்பத்தில் எழுத்துருக்களாக மாற்றி, நாம் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு மொழியில் உள்ள ஒலிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகளும் உருவாகிவிட்டன.
ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும். கல்வியாளர்கள், மொழி அறிஞர்கள், குழந்தைகள் நல செயல்பாட்டாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பார்வை கொண்ட பலரும் இதைத்தான் தெரிவிக்கின்றனர். அறிவியலைப் புறக்கணிக்கும் கட்சியான பாஜகவும் அதன் நிர்வாகிகளும் மொழித் திணிப்பைக் கட்டாயமாக்குகிறார்கள்.
ஒருவர் விரும்புகிற எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகளல்ல. எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதைத்தான் அன்று முதல் இன்று வரை தெளிவாகச் சொல்கிறோம். ஆறறிவு கொண்ட அனைவருக்கும் இது புரிகிறது. ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஏன் புரியவில்லை? புரியாமல் இல்லை. புரியாதது போல பாசாங்கு செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் ஏதேனும் மூன்று மொழி என்பதல்ல.

திமுக-வினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்றுத்தரப்படுகிறது என்று விமர்சனம் செய்கிறார்கள். திமுக-வினரில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துகிறவர்களும், ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துகிறவர்களும் உரிய அனுமதியுடன்தான் நடத்துகிறார்கள்.
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால், அதற்கு காரணம் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கைதானே தவிர, திமுக-வினரோ வேறு எந்தக் கட்சியினரோ தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள். தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் எதிலும் மும்மொழித் திட்டம் கிடையாது. இந்தி மொழி என்பது கட்டாயமுமில்லை.
வட இந்திய மாநிலங்களில் தமிழ் சபா எங்கே?
பாஜக ஆட்சி செய்கின்ற இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளைவிட, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லாத-இருமொழிக் கொள்கை வழியிலான அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரம் உயர்ந்தே இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. தென்னிந்தியர்கள் இந்தியைக் கற்க தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டதுபோல, வடஇந்தியாவில் தென்னிந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள உத்தர பாரத தமிழ் பிரச்சார சபாவையோ, திராவிட பாஷா சபாவையோ நிறுவ முடிந்ததா?
வள்ளுவர் சிலையை கங்கை கரையில் நிறுவுவதாக சொல்லி குப்பை மேட்டில் போட்டவர்களா தமிழ் கற்றுத் தருவதற்கான அமைப்பை நிறுவப் போகிறார்கள்? கோட்சே வழியைப் பின்பற்றும் இயக்கத்தினர் காந்தியின் நோக்கத்தை ஒரு போதும் நிறைவேற்ற மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.