அரசு சேவைகள் விரைவாக கிடைக்கும்… வருமா பொதுச்சேவை உரிமைச் சட்டம்?

மிழகத்தில் சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில் தான் மாறி வரும் டிஜிட்டல் யுகத்தைக் கருத்தில்கொண்டு, பொதுமக்களின் சிரமங்களைப் போக்கும் வகையில், அரசு சேவைகள் அலைச்சல் இல்லாமல் விரைவாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. கணினி மற்றும் இணைய வசதி இல்லாத மற்றும் அதில் விண்ணப்பிக்க இயலாதவர்களுக்காகவே அரசு இ சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இ சேவை மையங்களும் தாமதமும்

இந்த மையங்கள் மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு சேவைகளைப் பெற விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு சொந்தமாகவோ அல்லது இ சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பித்தாலும், பலருக்கு ஏதாவது காரணங்களால் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் போன்ற யாராவது ஒரு அதிகாரியை நேரில் சந்திக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அவ்வாறு நேரில் செல்லும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏதாவது கள ஆய்வு அல்லது உயரதிகாரிகள் உடனான சந்திப்பு என அலுவலகத்தில் இல்லாத நிலையும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு அலைச்சல், காலதாமதம் ஏற்படுவதாக பல்வேறு பொதுநல அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டாலும் கூட சில சமயங்களில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும், லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்படுவதாகவும் அவை குற்றம்சாட்டுகின்றன.

வருமா பொதுச் சேவை உரிமைச் சட்டம்?

இதனால், ” மக்களுக்கு அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக பொதுச் சேவை உரிமைச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” எனக் கடந்த பல ஆண்டு காலமாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அச்சட்டம் இன்னும் வந்தபாடில்லை.

இந்த நிலையில் தான், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், அதிகாரிகளுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், “மனுக்கள் பெறப்பட்ட உடனோ, அதிகபட்சம் 3 நாட்களுக்குள்ளோ ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும்; மனுதாரரின் கோரிக்கையானது அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும்; கோரிக்கை தீர்க்கப்பட்டிருந்தால் என்ன தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான விவரம், நிராகரிக்கப் பட்டிருந்தால் அதற்கான காரணம் ஆகியவை மனுவில் எழுதப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

’20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது’

ஆனால், தலைமைச் செயலாளரின் நோக்கம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும், அதற்கான அவரது அணுகுமுறை பயனளிக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழகத்தில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது.

எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருந்தால், டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால் அரசின் பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும். அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்” எனக் கூறியுள்ளார்.

அதிகாரிகள் மனது வைக்க வேண்டும்’

இதனிடையே “பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள பல மாநிலங்களிலும் அவை பெயரளவுக்கே உள்ளது. நிராகரிக்கபடும் விண்ணப்பங்கள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகளே விசாரிப்பதால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதில் அதிகாரிகள் மனது வைத்தால் மட்டுமே மாற்றம் வரும்” என்று கூறுகிறார்கள் பொது நல ஆர்வலர்கள்.

அதிகாரிகளின் மன மாற்றம் ஒருபுறம் இருந்தாலும், இதில் முதல் நடவடிக்கையாக பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dprd kota batam. Quiet on set episode 5 sneak peek. Nikki glaser wants to kill as host of the globes.