தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த திட்டங்கள் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, திட்டங்களின் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து மாநில திட்டக்குழு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில், துறை சார்ந்த 16 அறிக்கைகளை மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார்.
அதில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் மாணவர்கள் மட்டுமல்ல; கல்வித்துறையில் நடைபெற்ற வளர்ச்சி என்ன, மக்களின் தேடி மருத்துவத் திட்டம் மூலம் கிராமப்புற சுகாதாரம் எந்த அளவிற்கு மேன்மையடைந்துள்ளது, நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பு கூடியதால் சமூகம் அடைந்துள்ள வளர்ச்சி என்ன என்பது போன்ற தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
அரசு திட்டங்களால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம்
அந்தவகையில் மாநில திட்டக்குழு அறிக்கையின்படி, தமிழக அரசின் திட்டங்களால் சமூகத்தில் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் மற்றும் தாக்கம் என்ன என்பதை , சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மாநில திட்டக்குழுவின் 5 ஆவது ஆய்வுக் கூட்டத்தின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவரித்தார்.
” தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும் மக்களை சென்றடைந்து வருகின்றன. அரசின் ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை முழுமை அடைந்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது.
விடியல் பயணம் மூலம் பெண்கள் முன்னேற்றம் மூலம் அவர்களது சமூக பங்களிப்பு அதிகமாகியுள்ளது.
புதுமைப்பெண் திட்டம் மூலம் பெண்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
பொருளாதார சமூக நீதி அளவில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம்.
மாநில திட்டக்குழுவின் அறிக்கைதான் திமுக ஆட்சியின் மார்க் ஷீட்.
இப்படி ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு பிரிவினரை உயர்த்தி வருகிறது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திட்டக் குழுவுக்கு ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்
தொடர்ந்து பேசிய அவர், ” அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய திட்டமிடுங்கள். காலதாமதமின்றி அனைத்து பயன்களையும் மக்கள் பெற்றாக வேண்டும். அதற்கான இலகுவான நிர்வாக சீர்திருத்தங்களை சொல்லுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்
வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அது தான் திராவிட மாடல் வளர்ச்சி.
இதே அடிப்படையில் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை திட்டி உள்ளோம், இன்னும் திட்டங்கள் வர உள்ளன. மாநிலத் திட்டக் குழு மூலம் நான், புதிய புதிய சிந்தனைகளை திட்ட வடிவங்களை எதிர்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.நாம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் எந்த அளவிற்கு சிறப்பானவை என்பதை உங்களின் அறிக்கைகள் சொல்கிறது. ஆலோசனை சொல்வதோடு கடமை முடிவதில்லை வழங்கிய ஆலோசனைகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.