Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி தொடர்ந்து நீடிப்பார்..? – பின்னணி தகவல்கள்!

மிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரே அப்பதவியில் தொடர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் 9 மாநிலங்களுக்கு என 10 புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

அதே சமயம், நாளையுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இவ்விரு மாநிலங்களுக்கான புதிய ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. இந்த இரு ஆளுநர்களுமே மசோதாக்களை முடக்குவது மற்றும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் முரண்டு பிடிப்பது எனப் பல்வேறு விஷயங்களில் மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், இவர்களது மாற்றத்தை தமிழகத்தில் ஆளும் திமுக-வும், கேரளாவில் ஆளும் இடது முன்னணியும் எதிர்பார்த்து இருக்கின்றன.

இந்த நிலையில் தான், மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற உடனேயே, ரவி டெல்லி சென்று மோடியைச் சந்தித்தார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினார். அவர் டெல்லியில் தொடர்ந்து தங்கி இருந்து மேற்கொண்ட இந்த சந்திப்பு, தமிழக ஆளுநர் பதவியில் அவர் தொடரக்கூடும் என்றும், இதற்காகவே அவர் மோடி உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசினார் என்றும் கூறப்பட்டது.

மீண்டும் நியமிக்க எதிர்ப்பு

இதனையடுத்து, மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதில், தமிழக ஆளுநரின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரை மீண்டும் இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை என்றும், எனவே ரவியை இரண்டாவது முறையாக மீண்டும் நியமித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

பதவியை நீட்டிக்க முடிவு

இது குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில் தான், தற்போது தமிழக ஆளுநர் பதவியில்ஆர்.என்.ரவி தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது, வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாடு நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் பங்கேற்க இருப்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, மத்திய அரசும் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க முடிவு செய்து குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழக ஆளுநராக நீடிப்பார் என்றும், இதற்கான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version