Amazing Tamilnadu – Tamil News Updates

விவசாயத் துறையில் AI தொழில்நுட்பத்தைக் கொண்டு வரும் தமிழக அரசு… உழவர்களுக்காக ‘அக்ரி – பாட்’ இணையதளம்!

வேளாண்மை துறையின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான ஆய்வுகள், தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகளுக்காக தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையிலான குழுஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகியநாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளது.

இந்த பயணத்தின் ஓர் அங்கமாக நேற்று சிங்கப்பூர் வந்தடைந்த வேளாண் அமைச்சர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மையத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு மையத்தைப் பார்வையிட்டு, அதன்விஞ்ஞானிகள் டாக்டர் டேரியல், டாக்டர் வில்லியம்ஸ் ஆகியோருடன் வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு (Artifical Intelligence) குறித்து கேட்டறிந்தார்.

விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விடை

மேலும், தமிழ் மொழியில் வேளாண்மைக்கென தனித்துவம் வாய்ந்த ‘சாட் ஜி.பி.டி’ போன்று ‘அக்ரி–பாட்’என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு இணையதளத்தை உருவாக்குவது குறித்தும் அவர்களுடன் விவாதித்தார். இந்த செயலிமூலம், வேளாண் தொழில்நுட்பங்களையும் வேளாண்மை சார்ந்த தகவல்களையும் துரிதமாக தமிழக விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க இயலும்.

உழவர்கள் தங்களது செல்போன் மூலம் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ள இயலும். சிங்கப்பூர் நாட்டில், தமிழ் ஓர் ஆட்சி மொழியாக உள்ளதால் சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு மையம், தமிழக அரசுடன் இணைந்து இந்த செயலியை உருவாக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மேலும், சிங்கப்பூர் நகரில் கொய்மலர்களை ஏற்றுமதி செய்யும் ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையை அமைச்சர் பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டுள்ள பலவகையான கொய்மலர்களின் தரம் மற்றும் அவற்றை ஏற்றுமதி செய்ய தேவையான நுணுக்கங்களையும், சிங்கப்பூர் நகரில் அமைந்துள்ள குணப்படுத்துதல் பூங்கா (Healing Garden)-ஐ பார்வையிட்டு அங்குள்ள மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்களைப் பற்றிய விவரங்களையும் கேட்டறிந்தார்.

சிங்கப்பூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மையத்திலுள்ள செயற்கை நுண்ணறிவு மையத்தில் பின்பற்றப்படும் வேளாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஒப்புதலைப் பெற்று, அவற்றை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version