இந்த ஆண்டு B.E / B.Tech கட்-ஆஃப் மதிப்பெண் குறைவானது ஏன்… யாருக்குப் பலன்?
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான பி.இ./ பி. டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, கடந்த மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 12 ஆம் தேதி நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 53,954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 1 லட்சத்து 99,868 விண்ணப்பங்கள் தகுதி உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடந்த 10 ஆம் தேதி அன்று தரவரிசை வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு பொறியியல் தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்ணை 65 மாணவர்கள் பெற்றுள்ளனர். இதில், 58 பேர் மாநில பாடப்பிரிவுகளிலும் 7 பேர் இதர பாடப்பிரிவுகளிலும் படித்தவர்கள். இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3 வரை மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும், கல்லூரிகள் மற்றும் அதில் உள்ள இடங்களில் எண்ணிக்கை ஜூலை 15 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
முதலில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு 65 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகும். அதேபோல் 195 கட்-ஆஃப் மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,862 ஆகும். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு 2,911 பேர்களாக இருந்தது.
குறையும் கட்-ஆஃப் மதிப்பெண்
இவ்வாறு முதல் நிலை ( Top Rank ) மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாலும், பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் அதிகரித்து இருப்பதாலும் கட்-ஆஃப் மதிப்பெண் குறைகிறது.
இதனிடையே நீட் முறைகேடு தொடர்பான வழக்கால், இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவது தாமதம் ஆகுமோ என்ற கேள்வி எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணையின்போது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு ஜூலை 3 ஆவது வாரத்தில் தொடங்கி 4 சுற்றுகளாக நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இது ஒருபுறம் இருந்தாலும், மருத்துவக் கல்லூரிக்கான கலந்தாய்வு தாமதத்தால் பொறியியல் கலந்தாய்வு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2 லட்சம் மாணவர்கள் இதற்காக காத்திருக்கக் கூடிய நிலையை தவிர்க்கும் வகையில், கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
யார் யாருக்குப் பலன்?
இந்த நிலையில், கட் ஆஃப் மதிப்பெண் குறைந்தது மற்றும் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியதும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்தால், அங்கு செல்பவர்களால் ஏற்படும் காலியிடம் ஆகியவற்றால், கட் ஆஃப் மதிப்பெண்ணில் சற்று குறைந்தவர்களுக்கு, விரும்பிய படிப்பு அல்லது கல்லூரியில் சேரும் விருப்பம் நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனலாம். அதேபோன்று குறிப்பிட்ட கல்லூரிகளில் சேர, கட் ஆஃப் மதிப்பெண் மிக குறைவாக உள்ளவர்களில் கணிசமானோருக்கு இடம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.