ஒரு காலத்தில் ‘எலக்ட்ரானிக் சிட்டி’ என்றால் ‘பெங்களூரு’ தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு கர்நாடகமும் உத்தரபிரதேசமும்தான் மின்னணு ஏற்றுமதியில் சிறந்த மாநிலங்களாக கருதப்பட்டது. ஆனால், தமிழ்நாடு இப்போது அந்த இரு மாநிலங்களையும் தாண்டி முதலிடத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் பாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ், சால்காம்ப், பெகட்ரான் போன்ற 15 முன்னணி மின்னணு தொழிற்சாலைகள் இருக்கின்றன. மேலும், தமிழ்நாட்டில் தயாராகும் மின்னணு பொருட்களில் முக்கியமாக ஆப்பிள் ஐ போன்கள் தான் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் மிக அதிகளவில் மின்னணு பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்கின்றன.
இந்த நிலையில், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சிறந்த இடத்தில் இருக்கும் தமிழ்நாடு, தனது முந்தைய சாதனைகளை முறியடித்து ஏற்றுமதியில் ஒரு பெரிய வளர்ச்சியைக் காட்டியுள்ளதாகவும், இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 32.84 சதவீதத்தை அடைந்துள்ளதாகவும் கடந்த மே மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த இடத்தில் கர்நாடகம் 15.78 சதவீதம் என்ற அளவிலும், 3 ஆவது இடத்தில் உத்தரப்பிரதேசம் 15.32 சதவீதத்திலும் இருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த நிதியாண்டில் 9 பில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 9.56 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்து, மற்ற மாநிலங்கள் எட்டிப்பிடிக்க முடியாத நிலையை அடைந்துவிட்டது.
ரூ. 1 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி இலக்கு
இந்த நிலையில், தமிழகத்தின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக ( 12 பில்லியன் டாலர்) உயா்த்த தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் ‘இன்வெஸ்டோபியா’ எனும் பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டில், யுஏஇ-யின் பொருளாதாரத் துறை அமைச்சா் அப்துல்லா பின் டூக் அல் மா்ரி, சிஐஐ-யின் சா்வதேச கவுன்சில் தலைவா் தினேஷ், தெற்கு மண்டல தலைவா் ஆா்.நந்தினி மற்றும் முதலீட்டாளா்கள் பலா் கலந்துகொண்டனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அமைச்சர் டி.ஆா்.பி. ராஜா, “இந்தியாவை இயக்கும் சக்திவாய்ந்த இயந்திரமாக தமிழகம் உள்ளது. தொழில்நுட்பப் பொருள்கள் உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. நாட்டின் மின்னணு பொருள்களின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 10 பில்லியன் டாலா் மதிப்பிலான மின்னணு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகமாகும். இந்த நிலையில், அதை 12 பில்லியன் டாலராக உயா்த்த தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. தமிழகத்துக்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் (யுஏஇ) இடையே ஏறக்குறைய 1,800 ஆண்டுகளுக்கு மேலாக வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு நாடுகளுடன் இணைந்து தொழில் தொடங்குவதன் மூலம் தமிழகம் இன்னும் பெரிய உயரங்களை எட்டும் என நம்புகிறோம்.
விவசாயம், உணவுப் பாதுகாப்பு போன்ற பல துறைகளில் யுஏஇ-யுடன் இணைந்து செயல்பட ஆா்வமாக உள்ளோம். எதிா்காலத்தில் மத்திய கிழக்கு மட்டுமன்றி ஆப்பிரிக்க சந்தைகளிலும் கால் பதிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. யுஏஇ-யுடன் வெறும் ஒப்பந்தங்கள் போடுவதால் மட்டும் வளா்ச்சி காண முடியாது. அதனால், இந்த மாநாட்டில் கையொப்பமாகும் அனைத்து ஒப்பந்தங்களையும் ஆராய தனிக் குழு அமைக்கப்படவுள்ளது. அக்குழு இந்த ஒப்பந்தங்களின்படி நடைபெறும் அனைத்துப் பணிகளையும் மேற்பாா்வையிட்டு அதை மேலும் விரிவுபடுத்த ஆலோசனை மேற்கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.