தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது என்றும், தமிழகத்தின் கல்வித் தரம் தேசிய சராசரியைவிட கீழே போய்விட்டது என்று ஆளுநர் ஆர்.என். ரவி அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு “மாநில கல்வித் திட்டம் குறித்து ஆளுநர் ரவி ஆய்வுசெய்ய விரும்பினால், மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்துக்கொள்ளட்டும்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலடி கொடுத்திருந்தார். மேலும், “ஆளுநரின் இந்தப் பேச்சு உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே மாநில பாடத்திட்டத்தின் தரம் கீழ் நிலையில் இருக்கிறது என்ற கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வாபஸ் பெற வேண்டும்” என பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட கல்வியாளர்கள் பலர் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், ஆளுநரின் விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் வகையில் கல்வி தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாக பட்டியலிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்த ரூ.1,086 கோடியில் 614 பள்ளிகளில் 3,238 வகுப்பறைகள், 21 அறிவியல் ஆய்வகங்கள், உள்கட்டமைப்புகள் மேம்பாடு , ரூ.551.411 கோடியில் 28,794 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Class Rooms),
ரூ.436.746 கோடியில் 8,863 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பயனடையும் காலை உணவுத் திட்டம்,
புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம்,நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
காலை உணவுத் திட்டம்
காலை உணவுத் திட்டத்தின் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காலை உணவை உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள். ஆய்வகங்கள். கழிவறைகள், சுற்றுச்சுவர்கள், மாணவ/மாணவிகளுக்கு தங்கும் விடுதிகள் அமைக்க பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
14,019 ஆசிரியர்கள் நியமனம்
அரசுப் பள்ளிகளின் கல்விப் பணிகள் தடையின்றிச் செம்மையாக நடைபெற வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ள அறிவுரைகள்படி 4,989 இடைநிலை ஆசிரியர்கள் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876 முதுகலை ஆசிரியர்களுக்கான மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்யப்பட்டு வகுப்பறைகளில் கற்பித்தல் பணி தடையின்றி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 76 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
நான் முதல்வன் திட்டம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 9-12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, ஏறத்தாழ 10 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
புதுமைப்பெண் – தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்
அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று பின்னர் உயர்கல்வி பயிலும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம், அதேபோல மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகியவற்றில் ஏறத்தாழ 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் பயன் பெறுகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள்
தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்பத் தங்களைச் சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கு உதவும் வகையில் 101 கோடியே 48 லட்சம் ரூபாய்ச் செலவில் கைக் கணினிகள் (Tablet) வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.