தமிழகத்தில் பருவமழையையொட்டி காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் பரவலாக ஏற்படுவது வழக்கம் தான் என்றாலும், பல மாவட்டங்களில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், அவ்வாறு காய்ச்சல் வந்தால் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தி உள்ள தமிழக அரசு, அது தொடர்பான அவசர உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் பரவலாக கோடை மழை பெய்த நிலையில், ஜூன் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனையொட்டி, மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் அரசால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று உன்னி காய்ச்சல் கடலூர், தஞ்சாவூர், சென்னை ஆகிய மாவட்டங்களிலும், எலிக் காய்சல் சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.
மஞ்சள் காமாலையை பொறுத்தவரை சென்னை, திருச்சி, தேனி போன்ற பகுதிகளில் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்புளுயன்சா காய்ச்சல் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்புகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நேற்று வரை 6,565 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பன்றிக் காய்சலினால் 390 பேரும், புளு காய்ச்சலினால் 56 பேரும், எலிக் காய்ச்சலினால் 1,481 பேரும், உன்னி காய்ச்சலினால் 2,639 பேரும், வெறி நாய்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் 22 பேரும், மஞ்சள் காமாலையினால் 1750 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பன்றிக் காய்ச்சல், புளு காய்ச்சல், எலிக் காய்ச்சல், உன்னி காய்ச்சல், மஞ்சள் காமாலையினால் உயிரிழப்புகள் இல்லை.
‘உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்’
வரும் மாதங்களைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையினை எதிர்நோக்கியுள்ள மாதங்களாகும். எனவே நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகாததன் காரணமாகவும், அவர்களின் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததன் காரணமாகவும் 3 பேர் உயிரிழந்ததாக கூறினார்.
சென்னை, கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த அவர், பொதுமக்களுக்கு நோய்த்தடுப்புக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அவசர உதவி எண்கள்
தமிழகத்தை பொறுத்தவரை 2972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சல் கண்டவர்களுடைய அறிக்கை பெறப்பட்டு வருகிறது. அப்படி பெறப்பட்ட அறிக்கைகளை எந்த வகையான காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கொசுப் புழு உற்பத்தியாவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பாதிப்புகள் யாருக்கேனும் ஏற்பட்டால் தன்னிச்சையாக மருத்துவர்களின் பரிந்துரைகள் இல்லாமல் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். யாருக்கேனும் அவசர உதவி தேவைப்பட்டால் 104, 108 போன்ற அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.