Amazing Tamilnadu – Tamil News Updates

தேங்காய் விலை திடீர் உயர்வுக்கு காரணம்… குறைவது எப்போது?

மிழ்நாட்டில் இல்லத்தரசிகள் சமையலறையில் பயன்படுத்தும் முக்கிய பொருட்களில் ஒன்று தேங்காய். காலையில் இட்லி, தோசைக்கு வைக்கும் சட்னி முதற்கொண்டு, மதியம் குழம்பு, பொரியல் மற்றும் இரவில் சப்பாத்திக்கு வைக்கும் குருமா வரை தேங்காய் இல்லாமல் சமையலே கிடையாது.

இந்த அளவுக்கு சமையலில் நீங்கா இடம் பிடித்துள்ள தேங்காய் தான் சமீப நாட்களாக சாமான்ய மக்களை அச்சத்துடன் பார்க்கும் நிலைக்கு உருவாக்கி விட்டது. காரணம் தேங்காய் விலையில் ஏற்பட்ட அதிரடி உயர்வு தான். கடந்த 2 வாரங்களுக்கு முன், கிலோ 40 ரூபாயாக இருந்த தேங்காய் விலை, தற்போது 65 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. பீஸ் ரேட்டாக வாங்கினால், தேங்காய் ஒன்றின் விலை சைஸை பொறுத்து 35 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வீடுகளுக்கு அருகில் உள்ள சில்லறை கடைகளில் இன்னும் விலை அதிகம்.

இதனால், ஏராளமான வீடுகளில் காலை டிபனுக்கு தேங்காய் சட்னி கட். அதேபோன்று குழம்பு, பொரியலும் தேங்காய் இல்லாமலேயே சமைக்கப்படுகிறது. இந்த அளவுக்கு தேங்காய் விலை திடீரென உயர்ந்ததற்கு என்ன காரணம்..? வாருங்கள் பார்க்கலாம்…

தேங்காய் விலை பொதுவாக ஒரே சீராகத்தான் இருக்கும். எப்போதாவது ஒரு முறை தான் விலை ஏற்றம் இருக்கும். பிறகு, வரத்து அதிகரித்து தானாகவே விலை குறையத் தொடங்கும். ஆனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தேங்காய் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் டன் ஒன்றுக்கு ரூ.28,000 லிருந்து தற்போது ரூ.70,000 என ஒன்றரை மடங்கு அளவிற்கு விலை கூடியுள்ளது.

காரணம் என்ன?

தமிழகத்தைப் பொறுத்தவரை, தென்னை அதிகம் பயிரிடப்படும் இடங்களில் முக்கியமானது பொள்ளாச்சி. தற்போது இங்குள்ள மரங்கள் காய்களின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதே, விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 40 சதவீத தென்னை மரங்கள் வேர் வாடல் நோய், வெள்ளை ஈ பிரச்னை மற்றும் அதிக வெப்பநிலை போன்ற பல காரணங்களால் பாதிக்கப்பட்டதால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளதாகவும், 5 லட்சம் மரங்களில் விளைச்சல் முற்றிலுமாக நின்றுவிட்டதாகவும், தொற்று நோய்களால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாகவும், தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் விலை இதுவரை இவ்வளவு உயரத்தை எட்டியதில்லை. இதில், கசப்பான உண்மை என்னவெனில், தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வால், உற்பத்தி குறைந்தபட்சத்தை எட்டியுள்ளதால் விவசாயிக்கு பெரிய லாபம் கிடைக்காது. பொதுவாக பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இருந்து தலா 12.5 டன் எடையுள்ள 60 லோடுகள் வரை உற்பத்தி செய்யப்படும். தற்போது, ​​விளைச்சல் 10 முதல் 15 லோடுகளாக குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்போது விலை குறையும்?

வரும் நாட்களில் அடுத்தடுத்து நவராத்திரி, தீபாவளி எனப் பண்டிகை நாட்கள் வரிசையாக வர உள்ளன. இதனால் பண்டிகை காலத்தில் தேங்காய் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வரும் நாட்களில் நல்ல மழை பெய்து, தென்னை மரங்களில் உள்ள குரும்பைகள் ஆரோக்கியமானதாக உருவாகி, காய் பிடிக்கத் தொடங்கி, அவை சந்தைக்கு வர குறைந்தபட்சம் 40 முதல் 50 நாட்கள் ஆகும். எனவே, வரும் 2025 ஜனவரி மாதம் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள் அவர்கள்.

Exit mobile version