அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், உயர் கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’ என்ற திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் உள்ள அரசு கலை கல்லூரியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,மாணவர்கள் கல்விக்காக தமது அரசு என்றும் துணை நிற்கும் என்றும், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போல் மாணவர்கள் சோர்ந்து போகாமல் போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
” எல்லாக் குழந்தைகளும் உயர்கல்வி படிக்க வேண்டும்! எந்தக் காரணத்தை கொண்டும், பள்ளிப்படிப்பு முடிந்ததும், ஒரு மாணவர் கூட உயர்கல்வி கற்காமல், திசைமாறி சென்றுவிடக்கூடாது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப, நல்ல வேலைவாய்ப்புகளை பெறவேண்டும். நம்முடைய மாணவர்கள் உயர்கல்வி பல பயின்று, வாழ்க்கையில் சிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு!
‘தடை… அது உடை..!’
இந்த இலக்குகளை அடைவதற்காக தான், நான் கடுமையாக உழைத்து புதிய பல திட்டங்களை உருவாக்கியிருக்கிறேன். மாணவக் கண்மணிகளான நீங்கள் எல்லோரும் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். படித்து, நல்ல உயரங்களை அடைந்து, உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடவேண்டும்.
வறுமை இல்லாத, சமத்துவம் வாய்ந்த, ஒரு அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை நாம் வருங்காலத்தில் உருவாக்க வேண்டும். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க எதுவும் தடையாக இருக்கக் கூடாது. தடங்கல் ஏற்பட்டால், அதை உடைத்தெறிந்து மாணவ சமுதாயம் வெற்றி பெறவேண்டும். அதற்கு வேண்டிய உதவிகளை செய்ய, நான் இருக்கிறேன்! நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது!
ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் அவர்கள், தன்னுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட தடங்கல்களை எதிர்கொண்டார் என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், அவர் பலவீனமானவராக வீட்டுக்குள் முடங்கிவிடாமல், தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் உள்ள பெண்ணாக போராடி, இன்றைக்கு நாம் எல்லோரும் பாராட்டக் கூடிய அளவிற்கு அவர் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்.
ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். “தடைகள் என்பது உடைத்தெறியத்தான்!” தடைகளைப் பார்த்து நீங்கள் ஒருபோதும் சோர்ந்துவிடக் கூடாது! முடங்கிவிடக் கூடாது! வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக இருக்கவேண்டும்! அதை குறி வையுங்கள்! நிச்சயம் ஒருநாள் வெற்றி வசப்படும்! உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைவிட, அதிக நம்பிக்கையை நான் உங்கள் மேல் வைத்திருக்கிறேன்!
உங்களுக்கு பின்னால், உங்கள் பெற்றோர், உங்கள் குடும்பம் மட்டுமல்ல; என்னுடைய அரசும் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்! மறந்துவிடாதீர்கள்! வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற போகும் புதுமைப் பெண்களுக்கும், தமிழ்ப்புதல்வர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!” என மேலும் பேசினார்.