மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை: ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
தமிழ்நாட்டில், அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவியருக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம், கடந்த 05.09.2022 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தினால், பொருளாதார சிக்கலினால் உயர் கல்வியைக் கைவிட நினைக்கும் மாணவிகள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு உயர் கல்வியில் சேருவது அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் உயர்கல்வி பயிலும் ஏராளமான மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவிகளுக்கு வழங்குவதைப் போல, அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
ரூ.401 கோடி ஒதுக்கீடு
இதனை கருத்தில்கொண்டு ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தற்போது தொடங்கி உள்ளது. இதற்காக ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம். தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் எண் கட்டாயம்
ஆதார் எண் இல்லாத மாணவர்கள், அந்த எண்ணை பெறுவதற்காக அதற்கான மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் எண் இல்லாத நிலையிலும், இந்த உதவித் தொகையைப் பெற, மேலும் சில அடையாள ஆவணங்களில் ஒன்றை அளிக்கலாம். அதாவது, ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ள அடையாளச் சீட்டு, ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ளதற்கான மனுவில் நகல், வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.
இந்த தகவல் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும். அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை எடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அந்த பகுதியில் ஆதார் மையம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20,000 மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.