“இனி, தமிழில் மட்டுமே அரசாணை…” – மத்திய அரசுக்கு தமிழக அரசு சொல்லும் செய்தி என்ன?

தமிழ்நாடு அரசு, தமிழை முழுமையாக ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தும் வகையில், “அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படல் வேண்டும், சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும்” என்பது உள்பட அது சார்ந்த பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், தமிழ்நாட்டின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து தலைமைச் செயலக துறைகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து துறைத் தலைமை அலுவலர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்கள் இங்கே…
அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படல் வேண்டும்.
சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும்.
துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடிதம் போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தாள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் எழுதுவதுமில்லாமல், அவை பற்றிய குறிப்புகள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும்.
அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
மேலும் ஆங்கிலத்தில் வெளியிட விலக்களிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கேற்ப தலைமைச்செயலகத் துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பிவைக்கவும் அல்லது அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசாணைகளை தேவைப்படின் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொழி அரசியலும் போராட்டமும்
தமிழ்நாட்டின் மொழி அரசியலும் மொழி உரிமைக்கான போராட்டமும் நீண்ட நெடிய வரலாறைக் கொண்டது. 1965-ல் இந்தி திணிப்புக்கு எதிராக எழுந்த போராட்டங்களும், அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்களின் மொழி உணர்வும், தமிழ்நாட்டை ஒரு தனித்துவமான மொழி அடையாளத்துக்கான மாநிலமாக உருவாக்கியுள்ளன.

மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தீவிரமாக எதிர்வினையாற்றி வரும் தமிழக அரசு, தமிழை ஆட்சி மொழியாக முழுமையாக நடைமுறைப்படுத்த எடுத்திருக்கும் இந்த முடிவு, தமிழக மொழி வரலாற்றின் அடுத்த அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு, இந்தியை ஒரு பொது மொழியாக முன்னிறுத்தும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மும்மொழிக் கொள்கையின் மூலம், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க முயல்வது, தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இதற்கு முன்னரும், 2019-ல் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டபோது, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த சூழலில், தமிழ்நாடு அரசு, அரசாணைகள், சுற்றறிக்கைகள், மற்றும் பொதுமக்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது, மொழி உரிமையை பாதுகாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மத்திய அரசுக்கு சொல்லும் செய்தி…
மேலும் தமிழக அரசின் இந்த முடிவு, மத்திய அரசுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது. அது, “தமிழ்நாடு, தனது மொழி உரிமையை எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளாது. மொழி என்பது வெறும் தொடர்பு கருவி மட்டுமல்ல; அது ஒரு மக்களின் பண்பாடு, வரலாறு, மற்றும் அடையாளத்தின் அடிப்படை” என்பது தான்.

அந்த வகையில் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி, மொழி உரிமைக்காக போராடும் அனைத்து மாநிலங்களுக்கும் இன்னொரு முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!