இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு, 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் (ரூ.83 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதற்கேற்ப துறை தோறும் முதலீடுகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், உள் கட்டமைப்பு மேம்பாடுகளை சாத்தியமாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர, சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவாக, உலக முதலீட்டாளர் மாநாட்டை கடந்த ஜனவரியில் தமிழ்நாடு அரசு நடத்தியது. 2 நாள் மாநாட்டிலேயே ரூ.6,64,180 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது.இதுபோல் கடந்த பிப்ரவரியில் ஸ்பெயின் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ரூ.3,440 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கின்றன.
இந்தியாவிலேயே முதலிடம்
இதன் மூலம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் தமிழ்நாட்டில் பல புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
பொருளாதாரத்திலும் தொழில் வளர்ச்சியிலும் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்துவரும் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட, தமிழ்நாடு சிறுகுறு நடுத்தர தொழில்கள் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி, மாபெரும் சாதனைகளை நிகழ்த்தி வருவதாக ரிசர்வ் வங்கியின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
39,699 சிறுகுறு தொழில்கள்

தமிழ்நாட்டில் 39,699 சிறுகுறு தொழில்கள் உள்ளன. இவை, 4,81,807 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்துள்ளன. இதன் மூலம், தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாட்களைக் (Mandays) கொண்டுள்ளது. மகராஷ்டிரா மாநிலத்தில் 26,446 தொழிற்சாலைகள் உள்ளன. 6,45,222 தொழிலாளிகள் உள்ளனர். இம்மாநிலம் 7,29,123 மனித உழைப்பு நாள்களைக் கொண்டுள்ளது.குஜராத் மாநிலத்தில் 31,031 தொழிற்சாலைகள் உள்ளன. 5,28,200 தொழிலாளிகள் உள்ளனர். இம்மாநிலம் 7,21,586 மனித உழைப்பு நாள்களைக் கொண்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குதல், அதிகளவில் உற்பத்திகள் செய்தல் ஆகியவற்றில் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்பதை இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தப் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாள்களைக் கொண்டு, தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
தமிழ்நாடு, ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.75 மனித உழைப்பு நாள்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மகாராஷ்டிரா ஒரு தொழிலாளிக்கு 1.13 மனித உழைப்பு நாள்களுக்கும், குஜராத் ஒரு தொழிலாளிக்கு 1.37 மனித உழைப்பு நாள்களுக்கும் மட்டுமே வேலை வாய்ப்புகளை அளிக்கின்றன.
இந்தப் புள்ளி விவரங்கள் மூலம், மற்ற இரண்டு மாநிலங்களை விட தமிழ்நாடு வேலை வாய்ப்புகளை அதிகரித்து, உழைப்பாளிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மனித உழைப்பு நாள்கள், தொழிலாளிகள் இடையே பெரிய வேறுபாடு காணப்படுவதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.