Amazing Tamilnadu – Tamil News Updates

சூரிய சக்தி மின் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை!

மிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை மின்சாரமும் சூரிய ஒளி மின்சாரமும் பெரிய அளவில் கைகொடுக்கின்றன. அந்த வகையில், தமிழகத்தில் மிக அதிகமான சூரிய ஆற்றலும் குறைந்த அளவு மழையும் கிடைப்பதால் இங்கு சூரிய மின்சாரம் அதிக அளவு பெறப்படுகிறது.

இந்த நிலையில், சூரிய மின்சக்தித் துறையில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று 5,512 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு, கடந்த மார்ச் 5 அன்று எட்டப்பட்ட 5,398 மெகாவாட் அளவைத் தாண்டி உள்ளது. அன்றைய தினம், 39.2 மில்லியன் யூனிட்கள் மின் கட்டமைப்பில் உறிஞ்சப்பட்டதாக தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ( TANGEDCO ) தெரிவித்துள்ளது.

புதிய சாதனை

இதன் மூலம், காற்றாலை மற்றும் சூரிய சக்தி இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளுடன் தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை புதிய உச்சங்களை எட்டியுள்ளது. 2023 செப்டம்பர் 10 அன்று 5,838 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தியை தமிழகம் எட்டிய நிலையில், இப்போது சூரிய சக்தி மின் உற்பத்தியிலும் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 2024, ஏப்ரல் 23 அன்று காணப்பட்ட 40.50 மில்லியன் யூனிட்கள் கொண்ட அதிக ஒற்றை நாள் சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனையை தற்போது முறியடித்துள்ளது.

கடந்த 2023-24 ஆம் ஆண்டில், தமிழகம் 11,033 மில்லியன் யூனிட் சூரிய சக்தியை மாநில பரிமாற்றப் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்ட சூரிய சக்தி மின் நிலையங்களிலிருந்து பயன்படுத்தியுள்ளதாக அரசாங்க ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தற்போது நிலப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவுதிறன் 8,145.53 மெகாவாட்டாக உள்ளது. இது, இந்திய அளவில் நான்காவது இடமாகும். இது, கட்டடங்கள் மேல் அமைக்கப்பட்ட மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவுதிறன் மற்றும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவுதிறன் ஆகிய இரண்டையும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து தினமும் சராசரியாக 2 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2024 ஜூன் 30 நிலவரப்படி, தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் மொத்த நிறுவப்பட்ட திறன் 22,754 மெகாவாட் ஆகும். அதில் காற்றின் மூலம் 10,789 மெகாவாட் மின்சாரமும், சூரிய சக்தி (தரையில் பொருத்தப்பட்ட திறன் 7873 மெகாவாட் மற்றும் கூரைத் திறன் 6790 மெகாவாட்) மூலம் 8617 மெகாவாட் மின்சாரமும், அதேபோன்று உயிரி மின் உற்பத்தி மற்றும் பெரிய நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும் முறையே 969 மெகாவாட் மற்றும் 2178 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுவதாக தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version