88 சதவீதம் அதிகமாக பெய்த தென்மேற்கு பருவமழை… வேகமாக நிரம்பும் அணைகள்!
தென்மேற்கு பருவமழை வழக்கமாக அந்தமானில் தொடங்கி ஜூன் முதல் வாரத்தில் கேரளாவைத் தொட்டு, படிப்படியாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி இருக்கும் மாநிலங்களில் 4 மாதங்களுக்கு, அதாவது செப்டம்பர் மாதம் வரை பெய்யும். தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு மழை தான் மாநிலத்தின் நீர் தேவைகளைப் பெருமளவில் பூர்த்தி செய்யும் என்றாலும், தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும்.
அதேபோன்று தென்மேற்கு பருவமழை தான், கர்நாடகாவின் அணைகளை நிரம்பச் செய்து தமிழகத்தின் காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு கைகொடுக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு கர்நாடகா அணைகளில் 65 சதவீதத்துக்கும் மேல் நீர் நிரம்பி விட்டதால், காவிரியில் தமிழகத்துக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்னொருபுறம் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
88 சதவீதம் அதிகம்
ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 17 வரை தமிழ்நாட்டில் 160.6 மி மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை அளவு 85.5 மி மீ ஆகும். ஆகவே தற்போதுவரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 88% அதிகமாக பெய்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், திருநெல்வேலியில் 450% அதிகமாகவும், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் 175% அளவிலும் அதிக மழை பெய்துள்ளது. நீலகிரி மற்றும் கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 19 ஆம் தேதியன்று மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேகமாக நிரம்பும் அணைகள்
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் நேற்று 38.67 அடியாக காணப்பட்ட நிலையில், ஒரே நாளில் 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் 27.2 அடி உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 49.53 அடியாகும். அதேபோன்று பொள்ளாச்சி ஆழியார் அணையிலும் தண்ணீரின் அளவு, கடந்த மூன்று தினங்களில் 8 அடி உயர்ந்துள்ளது. இந்த அணைதான் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 289 கிராமங்களுக்கும், கோவை நகருக்கும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
பில்லூர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 10 அடி உயர்ந்துள்ளது. பில்லூர் அணையின் நீர்மட்டம், அதன் முழு கொள்ளளவான 100 அடியில், 97 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,919 கன அடியாக உள்ளது. குறைந்தது 23,104 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
அதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், 7,460 அடி கொள்ளளவு கொண்ட மேல் பவானி அணையின் நீர்மட்டம் 7,412 அடியை எட்டியது. வரும் நாட்களில் மழை தொடரும் என்பதால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு மேலும் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.