சென்னையில் மகப்பேறு இறப்பு விகிதத்தை மேலும் குறைத்திட வல்லுநர்களின் விரிவான கருத்துகளை செயல்படுத்துவதற்காக “விடுபட்ட முக்கிய தொகுப்புகளை ஒன்றிணைத்தல்” என்ற தலைப்பில் பயிலரங்கை தொடங்கி வைத்து கடந்த 10 ஆண்டு மகப்பேறு இறப்பு விகித பகுப்பாய்வு குறித்த கையேட்டினையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்கும் விதமாக விடுபட்ட முக்கிய தொகுப்புகளை ஒன்றிணைத்தல் (Connecting the missing dots) என்கின்ற வகையில் பயிலரங்கம் நடத்தப்பட்டது.
மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பது எப்படி என்கின்ற வகையில் பல்வேறு வகையான ஆலோசனைகளை வழங்க உள்ளனர். மகப்பேறு இறப்பு விகித்ததில் உள்ள சவால்களை எப்படியெல்லாம் கையால்வது, களப்பணியாளர்கள் எதிர்கொள்கிற பிரச்னைகளுக்கு எந்த மாதிரியான தீர்வு காண்பது, எந்த மாதிரியான மருத்துவ அணுகுமுறைகளை கொண்டு வருவது, எந்த மாதிரியான கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொள்வது போன்ற பல்வேறு வகையான கருத்துக்களை ஒருங்கிணைக்கும் விடுபட்ட முக்கிய தொகுப்புகளை ஒன்றினைக்கும் ஒரு முயற்சிதான்.
தேசிய அளவை விட தமிழகத்தில் குறைவு
மகப்பேறு இறப்பு விகிதத்தை பொறுத்தவரையில் இன்றைக்கு ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 70 மரணங்கள் என்ற ஒரு சர்வதேச இலக்கை இந்தியா எட்டியிருக்கிறது. அதில், தமிழ்நாடு இலக்கை எட்டியதோடு மட்டுமல்ல ஒரு குறைந்த அளவிலான இறப்புகள் என்கின்ற வகையில் சாதனையும் படைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு தாய்மார்களின் இறப்பு விகிதம் 1 லட்சம் பிறப்புகளுக்கு 54 ஆக குறைந்திருந்தது. தேசிய அளவிலான இறப்பு விகிதம் 70 என்றிருந்தாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 54 என்கின்ற அளவில் குறைந்திருந்தது.
தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தியது, தமிழ்நாட்டின் மருத்துவச் சேவையை தரம் உயர்த்தியது, மருத்துவர்களின் அந்த கடுமையான உழைப்பை ஒருங்கிணைத்தது போன்ற பல்வேறு விஷயங்கள் காரணமாக ஒரே ஆண்டில் 54 என்பது நடப்பாண்டில் 45.5 ஆக குறைந்திருக்கிறது. இது இன்னமும் குறைந்திட வேண்டும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 99.9 சதவிகிதம் பிரசவங்கள் அதாவது 8.70 லட்சம் பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடக்கிறது. கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்னாள் நிறைய வீடுகளில் பிரசவங்கள் நடைபெற்ற நிலை மாறி, இன்றைக்கு 99.9 சதவிகிதம் மருத்துவமனைகளிலேயே பிரசவங்கள் நடைபெறுகிறது.
அரசு மருத்துவமனைகளில் 59 சதவீதம் பிரசவங்கள் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக சீமாங் சென்டர்களில் மட்டும் 80 சதவீதம் பிரசவங்கள் நடைபெற்று வருகிறது. அதிக அளவில் கர்ப்பகால சிக்கல்கள் உள்ள தாய்மார்களை கண்டறிந்து நல்ல முறையில் சிகிச்சை வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு என்கின்ற வகையில் விருது ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் மகப்பேறு பராமரிப்பு மையங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் பரிசு கடந்த ஆண்டு தரப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு பூஜ்ஜியம்
மகப்பேறு மரணங்களை இன்னமும் குறைத்திடும் வகையில் ஒரு இலட்சத்திற்கு 45.5 என்கின்ற வகையில் இருந்து பூஜ்ஜியம் நிலையில் கொண்டு வரும் வகையில் கருத்தரங்கம் உதவியாக இருக்கும். மேலும் இதுவரை விருதுநகர் மாவட்டம் மகப்பேறு இறப்பு பூஜ்ஜியம் என்கின்ற அளவில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோல் மற்ற மாவட்ட சுகாதார அலுவலர்களும் இதனைப் பின்பற்றி மகப்பேறு இறப்பு பூஜ்ஜியம் என்கின்ற அளவில் கொண்டு வர வேண்டும். மகப்பேறு மரண விதத்தில் கேரளா 15 சதவீதம் என்ற நிலையில் இருக்கின்றனர். அது குறித்தும் சுகாதர அலுவலர்கள் கேட்டு வருகின்றனர். மகப்பேறு இறப்புகளை குறைக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் தாய்மார்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதிகளில் நிபா வைரஸை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பேருந்துகள் மூலம் பயணிப்பவர்கள் மருத்துவக்குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை” என தெரிவித்தார்.