Amazing Tamilnadu – Tamil News Updates

இனி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கப் போகும் மாற்றுத் திறனாளிகளின் குரல்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாளை 72 ஆவது பிறந்த நாள். இதனையொட்டி அவரது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுக்கு அவரது கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். சென்னை, கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையான பெரியார் அரசு மருத்துவமனையை திறந்து வைத்துப் பேசுகையில், இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

” பொதுவாக, என்னுடைய பிறந்தநாள் வரும்போது, மக்கள் நலனுக்காக என் மனதுக்கு நெருக்கமான ஒரு திட்டத்தை தொடங்கி வைப்பது வழக்கமாக வைத்திருக்கிறேன். இதற்காக என்னுடைய கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை 2022-ல் தொடங்கினோம். அந்த கனவு நனவாகி, இதுவரை 41 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களில் 2.60 லட்சம் பேர் உயர் பணிகளுக்குச் சென்றுள்ளனர்.

அதேபோல், 2023ல் விளிம்பு நிலை மக்கள் நலனுக்காக, மனிதக் கழிவை மனிதனே அகற்றக்கூடிய அவல நிலையை மாற்ற, அதற்கான கருவிகளைத் தந்து பணியாளர்களையே தொழில்முனைவோர் ஆக்கும் திட்டத்தை அறிவித்தேன். இதன் மூலமாக இதுவரை 202 பேர் தொழில் முனைவோர்களாகி இருக்கிறார்கள். 2024ல் சென்னை மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைக்க நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்தேன்.

இதோடு கொளத்தூர் தொகுதியில் மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பியிருக்கிறோம். இந்த மருத்துவமனை வட சென்னை மக்களுக்கே உயிர்காக்கும் மருத்துவமனையாக காலத்திற்கும் செயல்பட இருக்கிறது. வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற நாம் எடுத்து வரும் முயற்சிகளில் இந்த பெரியார் மருத்துவமனை என்பது ஒரு மைல்கல். இதை பத்திரிகைகள் பாராட்டியிருக்கிறது.

எல்லா பிறந்தநாளுக்கும் ஒரு திட்டத்தை அறிவிப்பேன் என்று சொன்னீர்களே. இந்த பிறந்தநாளுக்கு என்ன திட்டம் அறிவிக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம், மகிழ்ச்சியான இந்த தருணத்தில் மனநிறைவான ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். மாற்றுத்திறனாளி சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்க அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்

எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றில் வரும் சட்ட மன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். இதன்மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் இடம் பெறுவது உறுதி செய்யப்படும். அவர்களின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும். அதிலும் முக்கியமாக விளிம்பு நிலை மக்களான மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம் பெறுவார்கள்” என அவர் தெரிவித்தார்.

உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையிலேயே மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் தங்கள் குரல்கள் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதை உறுதி செய்ய தேர்தலில் போட்டியிட்டால் தான் உள்ளாட்சி மன்றங்களில் உறுப்பினர்கள் ஆக முடியும் என்ற நிலை இனி இருக்காது. அந்த வகையில், மாநிலங்களவை மற்றும் சில மாநிலங்களில் இன்னும் நடைமுறையில் உள்ள சட்ட மேலவைகளில் எப்படி நியமன உறுப்பினர்கள் தங்களது துறை சார்ந்த நலன்களுக்காக குரல் எழுப்புகிறார்களோ அப்படி இனிமேல் மாற்றுத்திறனாளிகளுக்கான குரலும் தமிழக உள்ளாட்சி மன்றங்களிலும் ஓங்கி ஒலிக்கும் எனலாம்!

Exit mobile version