தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்தியை படிக்க விரும்பினால் படித்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால், திட்டமிட்டே கொண்டுவரும் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என்பதே தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. தமிழக அரசும் இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது.
தற்போது கூட ‘சமக்ரா சிக்ஷா’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டி உள்ளது. அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கூட, தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தன.
மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி, ” சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். ஆனால், நிதி வேண்டும் என்றால் PM SHRI திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.
ஆனால், “மத்திய பா.ஜ.க அரசு எந்த கல்வி கொள்கையை திணித்தாலும் அதை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இரு மொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தி கற்பதில் தமிழகம் முதலிடம்
இத்தகைய சூழலில் தான், தென்னிந்தியாவில் இந்தியை அதிகம் படிக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருவதுடன், ஆண்டுக்கு 3 லட்சத்து 50 மாணவர்கள் இந்தி படிக்கின்றனர் என்று இந்தி பிரச்சார சபா தெரிவித்துள்ளது.
இது குறித்து தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற இந்தி தேர்வை சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும் 3 லட்சத்து 54 ,655 மாணவர்கள் எழுதியுள்ளனர். 8 பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் தேர்வினை எழுதி வருகின்றனர்.
ஆந்திராவில் ஒரு லட்சத்து 4 , 959 பேர், கர்நாடகாவில் 5, 584 பேர், கேரளாவில் 8,452 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 1 லட்சத்து 16,611 பேர் தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.