Amazing Tamilnadu – Tamil News Updates

3 ஆண்டுகளில் ரூ. 5,577 கோடி கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு… 1,355 கோவில்களில் கும்பாபிஷேகம்!

மிழ்நாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றதிலிருந்து 2024 ஜனவரி 31 ம் தேதி வரையிலான கடந்த 3 ஆண்டு காலகட்டத்தில் 1,355 கோவில்களில் திருப்பணிகளைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 8, 436 கோவில்களில் 18,841 திருப்பணிகள் ரூ.3, 776 கோடி மதிப்பில் நடக்க அனுமதி வழங்கப்பட்டு, 5,775 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு இருக்கின்றன.

சமயபுரம், திருவெண்ணெய்நல்லூர், திருப்பாற்கடல், தாராபுரம், அரியலூர், சென்னை கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் 6 கோவில்களில் ரூ,8 கோடி மதிப்பில் புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டிருக்கிறது.

756 கோவில்களில் அன்னதானத் திட்டம்

தொடர்ந்து, 6 கோவில்களில் ரூ,28.78 கோடியில் புதிய ராஜகோபுரங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து மேலும் 15 கோவில்களில் ராஜகோபுரங்கள் ரூ,25.98 கோடி மதிப்பில் கட்டப்படும். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா வரகுணநாத சாமி கோவில், 3 நிலை ராஜகோபுரம் பக்தர்களின் நிதியுதவியாக ரூ,50 லட்சம் பெறப்பட்டு கட்டப்படுகிறது. 756 கோவில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி 82,000 பேர் பயனடைந்து வருகின்றனர். நடப்பாண்டு 7 கோவில்களில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது .

ரூ. 5,577 கோடி நிலம் மீட்பு

கடந்த மூன்றாண்டுகளில் அறநிலையங்களுக்குச் சொந்தமான நிலம், கட்டடம், மனை ஆகியவற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பிலிருந்து ரூ. 5,577.35 கோடி மதிப்பிலான 6, 140.59 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டிருக்கிறது.

ஆறு கோவில்களுக்கு சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் உருக்கப்பட்டு, 344.334 கிலோ கிராம் தங்கக்கட்டிகளாக மாற்றி, ரூ.191.65 கோடி மதிப்பில் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு வட்டி வருவாய் ரூ.4.31 கோடி வருகிறது. 11 கோவில்களுக்கு சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு வருகிறது.

2,000 கோவில்களுக்கு ஒரு கால பூஜை

ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில் ஒன்றுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் 2,000 கோவில்களுக்கு அரசு மானியம் ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தற்போது 17 ஆயிரம் கோவில்கள் பயனடைந்துள்ளன.

ஒரு கோவிலுக்கு ஒரு அர்ச்சகர் வீதம் பதிவு செய்து மாதம் ரூ,1,000 வீதம் வழங்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வரை 15 ஆயிரத்து 753 பேர் பயனடைந்திருக்கிறார்கள். பழனி கோவிலில் ரூ. 80 கோடியே 50 லட்சம் மதிப்பில் பழனி மற்றும் இடும்பன் மலை இடையே கம்பிவட ஊர்தி, அனுவாவி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய கோவில்களில் கம்பிவட ஊர்திகள் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.

வள்ளலாரின் 200 ஆவது ஆண்டு பிறந்த நாள், தர்மசாலை தொடங்கி 156 ஆவது ஆண்டு ஜோதி தரிசனத்தின் 152 ஆவது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா 52 வாரங்கள் கொண்டாடப்பட்டிருக்கிறது. பல்வேறு பணிகளால் இந்து சமய அறநிலையத்துறை பணிகளையும், முதலமைச்சரையும் அனைவரும் மனமுவந்து பாராட்டி வருகின்றனர் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version