கோடை விடுமுறை… அரசுப் பேருந்தில் பயணித்தால் ஒரு வருட இலவச பயண வாய்ப்பு! விவரம் என்ன?

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை என்றாலே, குடும்பத்துடன் சுற்றுலா, உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல் என மக்கள் உற்சாகமாக பயணிக்கும் காலம். பண்டிகைகளைப் போலவே, இந்த விடுமுறையிலும் தங்கள் சொந்த ஊர்களுக்கோ அல்லது புதிய இடங்களுக்கோ பயணிக்க மக்கள் தயாராகின்றனர். இதனை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி ஆன்லைன் முன்பதிவு மூலம் 01.04.2025 முதல் 15.06.2025 வரை அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளில் 75 பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில் 75 பேர், கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் பெறுவார்கள்.
பரிசு விவரங்கள்:
முதல் பரிசு (25 பேர்): 01.07.2025 முதல் 30.06.2026 வரை, முன்பதிவு வசதியுள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் ஒரு வருடத்திற்கு 20 முறை இலவசப் பயணம்.
இரண்டாம் பரிசு (25 பேர்): 01.07.2025 முதல் 30.06.2026 வரை, முன்பதிவு வசதியுள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் ஒரு வருடத்திற்கு 10 முறை இலவசப் பயணம்.
மூன்றாம் பரிசு (25 பேர்): 01.07.2025 முதல் 30.06.2026 வரை, முன்பதிவு வசதியுள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் ஒரு வருடத்திற்கு 5 முறை இலவசப் பயணம்.
பயணமும் பரிசும் உங்கள் கைகளில்!
இந்த கோடை விடுமுறையில் தங்களது பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிக்கொள்ள விரும்புவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்