உலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதிவிலக்கான திறமை சாலிகளைக் கொண்ட சில இடங்களில் தமிழ்நாடும் ஒன்று எனச் சொல்லலாம். இதற்கு கூகுள் சுந்தர் பிச்சை தொடங்கி உலக அளவில் பல்வேறு துறைகளில் சாதித்து பெயர் பெற்றவர்களில் பலரைக் குறிப்பிடலாம்.
அந்த வகையில், செஸ் போட்டியில் சர்வதேச அளவில் திறமையான வீரராக மிளிர்ந்தவர்களில் விஸ்வநாதன் ஆனந்த்தும் ஒருவர். இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பல்வேறு சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக்காட்டியதைக் குறிப்பிடலாம். அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி பாராட்டுகளைப் பெற்று தந்தது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டி… தமிழக வீரர்கள் அசத்தல்
இந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2024 போட்டி, கடந்த 5 ஆம் தேதி தொடங்கி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் (மாஸ்டர்ஸ் பிரிவு), பிரணவ் வெங்கடேஷ் ( சேலஞ்சர்ஸ் பிரிவு) ஆகிய வீரர்கள் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
அரவிந்த் – பிரணவ்
மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெற்ற மாஸ்டர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், இந்தியா நம்பர் ஒன் வீரர் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் லெவோன் அரோனியன் ஆகிய மூவரும் 4.5 புள்ளிகளை பெற்று சமநிலையை எட்டினர். இந்த 3 பேர்களில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிப்பதற்காக டைப்ரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.
இந்த 7 போட்டிகளிலும் அரவிந்த் சிதம்பரம் தோல்வியை சந்திக்காததால், அரவிந்த் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். பிளே ஆஃப் டைப்ரேக்கர் போட்டியில் அர்ஜுன் எரிகைசியும் லெவோன் அரோனியனும் பலப்பரீட்சை நடத்தினர் இதில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்ட கணக்கில் லெவோன் அரோனயன் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியனை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதேபோல் நடப்பாண்டிலும் தமிழ்நாட்டைச்சேர்ந்த வீரர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளனர். மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சாம்பியன் பட்டம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமையை தேடித் தந்துள்ளனர்.
‘தமிழ்நாட்டில் உருவாகி உள்ள 30 கிராண்ட்மாஸ்டர்ஸ்’
இந்த நிலையில், இந்த போட்டியின் நிறைவு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ” விளையாட்டு துறையில் முதலமைச்சர் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான உதவிகளை மேம்படுத்தியுள்ளார். அவரின் வழிகாட்டுதலின்படி விளையாட்டுத்துறை தமிழ்நாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தேசிய அளவைக் கடந்து, சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது தமிழ்நாடு விளையாட்டுத்துறை.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷ் எலைட் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளார். உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கி அரசு பாராட்டியது. இத்தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் 2780 புள்ளிகளைப் பெற்று அரவிந்த் சிதம்பரம், தனது கரியரின் உச்சத்தை அடைந்துள்ளார். மொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் 30 கிராண்ட்மாஸ்டர்ஸ் உருவாகியுள்ளனர்” என்றார்.