தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக இன்று காலை நியமிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே தலைமைச் செயலகம் வந்த முருகானந்தம், புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இணை செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்?
புதிய தலைமைச் செயலாளரான என். முருகானந்தம் 1991 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். கோவை மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர், டெல்லியில் தமிழ்நாடு அரசின் முதன்மைக் குடியுரிமை ஆணையர், தொழில்துறைச் செயலர், நிதிச் செயலர் போன்ற பதவிகளையும் வகித்தவர்.
பொறியியலில் கணிப்பொறி அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர். மேலும்,இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (Indian Institute Of Management -IIM) எம்.பி.ஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.
கொரோனா காலத்தில் திறமை காட்டியவர்
எந்தவொரு பணியை கொடுத்தாலும், அதனை திறம்பட செய்து முடிப்பவர் என்ற பெயர் எடுத்திருப்பவர் என். முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.குறிப்பாக, கொரோனா பரவல் காலக்கட்டத்தில் இவர் களத்தில் நின்று பணியாற்றி இருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுத்ததில் இவரது பங்களிப்பு அளப்பரியது என்கிறார்கள் சக அதிகாரிகள். கடந்த அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மை செயலாளராக பதவி வகித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முருகானந்தம் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.20 ஆண்டுகளுக்கும் மேலாக நிதித்துறையில் அனுபவம் மிக்கவர்களையே பொதுவாக இந்தப் பொறுப்பில் அமர்த்துவார்கள். ஆனால், நிதித்துறையில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு இந்த பொறுப்பு கொடுத்தது விமர்சனத்துக்கு உள்ளானது.ஆனால், தனது திறமையால் நிதித்துறை பொறுப்புகளை சிறப்பாக கையாண்டதாக பாராட்டுதலைப் பெற்றுள்ளார்.