அமைச்சரவை மாற்றம்: நீண்ட கால குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி!
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்த்தபடியே, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இரா.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
எந்தெந்த அமைச்சர்களுக்கு, எந்தெந்த துறை ?
வி.செந்தில் பாலாஜி – மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, கோவி. செழியன் – உயர்கல்வித்துறை, (தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்), ஆர்.இராஜேந்திரன் – சுற்றுலாத்துறை (சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சர்க்கரை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாடு), சா.மு.நாசர் – சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம் துறை
நீக்கப்பட்ட 3 பேர்; 7 பேருக்கு இலாகா மாற்றம்
மேலும், அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் 7 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றப்பட்டுள்ளது. அவை வருமாறு :
துணை முதலமைச்சர் உதயதி ஸ்டாலின் – விளையாட்டுத்துறை மற்றும் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறை
க.பொன்முடி – வனத்துறை, தங்கம் தென்னரசு – நிதி, காலநிலை மாற்றத்துறை, சிவ.வீ.மெய்யநாதன் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, என். கயல்விழி செல்வராஜ் – மனிதவள மேம்பாட்டுத்துறை, எம்.மதிவேந்தன் – ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன் – பால்வளத்துறை.
கவனிக்க வைத்த மாற்றங்கள்
இந்த அமைச்சரவை மாற்றத்தில் கவனம் ஈர்த்த நடவடிக்கை என்னவென்றால், அது பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும், வன்னியர் சமுதாயத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளதும் தான்.
பட்டியல் இனத்துக்கு முக்கிய இலாகாக்கள்
அந்த வகையில், பட்டியல் இனத்தவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படுவதில்லை என்ற நீண்ட கால குற்றச்சாட்டைப் போக்கும் வகையில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த கோவி. செழியனுக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறை இதுநாள் வரை அமைச்சர் பொன்முடியிடம் இருந்து வந்தது. அதேபோன்று என். கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையை இதுநாள் வரை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூடுதலாக கவனித்து வந்தார்.
வன்னியர் சமுதாயத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்
அதேபோன்று அமைச்சரவையில் ஆர்.இராஜேந்திரன் ( சுற்றுலாத்துறை) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம் வன்னியர் சமுதாயத்துக்கான பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம், பெரிய மாவட்டம் என்பதால், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை அமைச்சரவையில் சேர்த்துள்ளது, வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலில் கட்சிக்கு கூடுதல் பலமாக அமையும் என திமுக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.