உச்ச நீதிமன்ற உத்தரவை விமர்சித்த குடியரசுத் துணைத் தலைவர்… சட்ட மோதலுக்குத் தயாராகும் மத்திய அரசு!

குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மூன்று மாத காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுப் புகழ்மிக்க தீர்ப்பு, இந்திய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மசோதாக்கள் மீதான தீர்ப்பைத் தொடர்ந்து, வக்ஃபு சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கிலும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையன்று பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவும் மத்திய அரசுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் பலன் இருக்காது எனக் கருதியோ என்னவோ, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே நீர்த்துப்போகச் செய்யும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உச்ச நீதிமன்றத்தின் 142-வது பிரிவு பயன்பாட்டை “ஜனநாயகத்துக்கு எதிரான அணு ஆயுதம்” என விமர்சித்து, கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஜெகதீப் தன்கர் பேசியவற்றின் முக்கிய அம்சங்கள் இங்கே…
நீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடுவது ஏற்க முடியாது
“இந்தியாவின் குடியரசுத் தலைவர் உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருக்கிறார். அவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவது எங்கு கொண்டு செல்கிறது? இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.”
பிரிவு 142 ஜனநாயகத்துக்கு எதிரான அணு ஆயுதம்
“அரசியலமைப்பின் 142-வது பிரிவு, நீதித்துறையிடம் 24 மணி நேரமும் இருக்கும் ஒரு அணு ஆயுதமாகும். இது ஜனநாயக சக்திகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.”
நீதிபதிகள் சட்டமியற்றுவதா?
“குடியரசுத் தலைவரை காலக்கெடுவுக்குள் முடிவெடுக்கச் சொல்கிறார்கள். மசோதா ஒப்புதல் பெறாவிட்டால் அது சட்டமாகிவிடுமா? நீதிபதிகள் சட்டமியற்றுவார்களா, நிர்வாகப் பணிகளை செய்வார்களா, சூப்பர் பாராளுமன்றமாக செயல்படுவார்களா?”
நீதித்துறையின் பொறுப்பின்மை
“நிர்வாகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராளுமன்றத்துக்கு பொறுப்பாகிறது. ஆனால், நீதித்துறை நிர்வாகத்தை கையகப்படுத்தினால், யாரிடம் கேள்வி கேட்பது? தேர்தலில் யாரை பொறுப்பாக்குவது? நீதித்துறைக்கு எந்த பொறுப்பும் இல்லை, ஏனெனில் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது.”
அரசியலமைப்பு விளக்கம் மட்டுமே நீதிமன்றத்தின் உரிமை
“நீதிமன்றத்துக்கு உள்ள ஒரே உரிமை, 145(3)-வது பிரிவின் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே. குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.”
அதிகாரப் பிரிவினை முக்கியம்
“நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகிய மூன்று அமைப்புகளும் தத்தமது பகுதியில் செயல்பட வேண்டும். ஒருவர் மற்றவரின் பகுதியில் தலையிட்டால், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும்.”
நீதித்துறையின் மீதான கேள்விகள்
“டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் பணக் குவியல் கண்டெடுக்கப்பட்டது குறித்து நீதித்துறை ஏன் மௌனமாக உள்ளது? இதுபோன்ற சம்பவங்கள் நீதித்துறையின் ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகின்றன”
எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் குரலா?
உச்ச நீதிமன்றத்தின் 142-வது பிரிவு பயன்பாட்டை “ஜனநாயகத்துக்கு எதிரான அணு ஆயுதம்” என விமர்சித்த ஜெகதீப் தன்கரின் இந்த கருத்து மத்திய அரசின் குரலாகவே பார்க்கப்படும் நிலையில், இது, சட்ட நிபுணர்கள் மத்தியில் கலவையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?
தன்கர் கருத்துக்கு ஆதரவாக பேசும் சில மூத்த சட்ட நிபுணர்கள், நீதித்துறை அரசியலமைப்பு எல்லைகளை மதிக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். மேலும் அவர்கள், 142-வது பிரிவு, நீதியை நிலைநாட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, நிர்வாகத்தின் மீது கட்டளைகள் பிறப்பிக்க அல்ல. குடியரசுத் தலைவரின் அரசியலமைப்பு பாதுகாப்பு பொறுப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்துகின்றனர்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நியாயப்படுத்தும் மூத்த வழக்கறிஞர்கள், 142-வது பிரிவு, அரசியலமைப்பு நெருக்கடிகளைத் தீர்க்கும் ஒரு அவசியமான கருவி என்று கருதுகின்றனர். குறிப்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் மசோதா தாமதங்கள், மாநில அரசின் செயல்பாட்டை முடக்கியதாக விமர்சிக்கின்றனர். இதுபோன்ற சூழல்களில், நீதித்துறையின் தலையீடு, அரசியலமைப்பு செயல்பாட்டை உறுதிப்படுத்துவதாக அவர்கள் வாதிடுகின்றனர். 201-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் முடிவுகள் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டவை என்ற உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் இவர்கள், தன்கரின் விமர்சனம், நீதித்துறையின் பங்கை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் வரும் நாட்களில் உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான அதிகார வரம்பு குறித்த விவாதங்கள் இன்னும் தீவிரமாகும் என எதிர்பாக்கலாம்!