எட்டு நாள் பயணமாகத் திட்டமிடப்பட்ட ஒரு சிறிய பயணம், திடீரென ஒன்பது மாதங்களாக மாறி, பூமியை மணிக்கு 17,500 மைல் வேகத்தில் சுற்றி வருவதை கற்பனை செய்து பாருங்கள். இதுதான் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு நடந்தது.
2024 ஜூன் மாதம் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொடங்கிய ஒரு வழக்கமான பயணம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 286 நாள் நீடித்த ஒரு அற்புத சாகசமாக மாறியது. எட்டு நாள் சோதனைப் பயணமாகத் தொடங்கியது, பின்னர் அறிவியல் ஆராய்ச்சி, உயிரைக் காத்துக்கொள்வதற்கான சவால் மற்றும் டால்பின்களின் ஆச்சரிய வரவேற்பு என ஒரு மறக்க முடியாத பயணமாக அமைந்து, உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்து வந்த ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3. 27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.
சுனிதா வில்லியம்ஸின் சாகச பயணம், சாதனைகள், விண்வெளியில் அவர்கள் சாப்பிட்டது என்ன, பாதுகாத்த வெப்பக் கவசம் மற்றும் இந்த எதிர்பாராத தாமதம் ஏன் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஒரு வரமாக அமைந்தது போன்ற தகவல்களுடன் ஒரு விரிவான அலசல் இங்கே…

தொழில்நுட்ப சிக்கலால் ஏற்பட்ட தாமதம்
2024 ஜூன் 5 அன்று, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஸ்டார்லைனர் விண்கலத்தில் புறப்பட்டனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா, ஒரு விண்கலத்தை சோதிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். திட்டம் எளிமையாக இருந்தது: ISS-இல் இணைந்து, எட்டு நாட்கள் தங்கி, திரும்புதல். ஆனால் விதி வேறு திட்டம் வைத்திருந்தது. ஸ்டார்லைனரின் உந்து சக்தி சிக்கல்கள் காரணமாக, நாசா அதை மனிதர்களுடன் திருப்பி அனுப்புவதற்கு பாதுகாப்பற்றதாகக் கருதியது. இதனால், அவர்களை அங்கேயே விட்டுவிட்டு, செப்டம்பரில் விண்கலம் தனியாக திரும்பி விட்டது. இந்த நிலையில், பூமிக்குத் திரும்புவதில் ஏற்பட்ட இந்த தடை, அவர்களது அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக மாறியது. விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கினால், அது மனித உடலையும் மனதையும் எப்படி பாதிக்கிறது என்பது குறித்து நீண்டகால மைக்ரோகிராவிட்டியில் ஆராய ஒரு அரிய சந்தர்ப்பத்தை வழங்கியது.
மைக்ரோகிராவிட்டி ஆராய்ச்சி
‘மைக்ரோகிராவிட்டி’ என்பது குறைந்த புவியீர்ப்பு நிலையை குறிப்பதாகும். பூமியைச் சுற்றி வேகமாகச் செல்லும் ISS, ஒரு ‘மிதப்பு வீழல்’ ( “Floating Fall) நிலையில் இருப்பதால், அங்கு எடையின்மை உணரப்பட்டது. பொருட்கள் மிதந்தன, நீர் கோளங்களாக மாறியது. இந்த மைக்ரோகிராவிட்டியில், சுனிதாவும் வில்மோரும் தாவரங்களை வளர்த்து, சோதனைகள் செய்தனர். ஆனால் அவர்களின் உடலும் பாதிப்படைந்தது. எலும்புகள் பலவீனமாகி, தசைகள் சுருங்கின; ரத்தம் தலை நோக்கி பாய்ந்து பார்வையை மங்கலாக்கியது. இதைத் தடுக்க, தினமும் உடற்பயிற்சி செய்தனர். இந்த நிலை, செவ்வாய்க்கிரக பயணங்களுக்கு மனிதர்களை தயார் செய்யும் ஆராய்ச்சிக்கு உதவும் வகையிலான தகவலை அளித்தது. சுனிதாவின் பயணம், மைக்ரோகிராவிட்டியின் அதிசயங்களையும் சவால்களையும் உலகுக்கு காட்டியது.
வரப்பிரசாதமாக மாறிய தடை
” விண்கலத்தின் உந்து சக்தி சிக்கல்கள் காரணமாக சுனிதா வில்லியம்ஸும் வில்மோரும் ISS-லேயே தங்க நேரிட்டதால், நாசா அவர்களை Expedition 71/72 குழுவினராக முறையாக இணைத்து, அவர்களின் பயணத்தை ஒன்பது மாதங்களாக நீட்டித்தது. இந்த மாற்றம், அவர்களை தற்காலிக பயணிகளாக அல்லாமல், முழு நேர ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினர்களாக ஆக்கியது.
இதனையடுத்து சுனிதா, வில்மோருடன் இணைந்து நிலையத்தின் வன்பொருளை மேம்படுத்தினார். பழைய கருவிகளை மாற்றி, மாதிரிகளை சேகரித்து, குப்பைகளை பூமிக்கு அனுப்பினர். தீபாவளி, கிறிஸ்துமஸ், ஒலிம்பிக் வாழ்த்துகளை அனுப்பி, 400 கி.மீ உயரத்தில் இருந்து பூமியுடன் தொடர்பு கொண்டார்.
அவர்கள் 150-க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டு, விண்வெளி தோட்டக்கலை முதல் நீர் மீட்பு வரை பணியாற்றினர். இந்த எதிர்பாராத சேர்க்கை, அறிவியலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள பல்வேறு இயந்திரங்கள், கருவிகள் அல்லது உபகரணங்களை (hardware) சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக பழைய சூரிய சக்தி கருவிகளை புதியவற்றால் மாற்றினர். மின் இணைப்புகளை சரிசெய்தனர். 400 கி.மீ உயரத்தில், பூமியைச் சுற்றி மிதக்கும் இந்த நிலையத்தை சீராக இயங்க வைக்க, அவர்கள் உபகரணங்களை புதுப்பித்தனர்.
பாதுகாத்த வெப்பக் கவசம்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணித்தபோது, அதன் நவீன வெப்பக் கவசம் அவர்களை பாதுகாப்பாக ISS-க்கு அழைத்துச் சென்றது. இது பழைய வெப்பத்தடுப்பு ஓடுகள் போலல்லாமல், ஒரு தனித்துவமான வெப்பத்தை உறிஞ்சும் அமைப்பாகும். 3,000°F (1,650°C) வெப்பத்தைத் தாங்கும் இது, மீண்டும் நுழையும்போது விண்கலத்தை பாதுகாக்கிறது. இந்த தொழில்நுட்பம், விண்வெளி பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சுனிதாவின் பயணம், இத்தகைய அறிவியல் முன்னேற்றங்களை வெளிப்படுத்தியது. இது எதிர்கால பயணங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது.
விண்வெளியில் என்ன சாப்பிட்டார்கள்?
உறைய வைக்கப்பட்ட உலர்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்
பேக் செய்யப்பட்ட பாஸ்தா மற்றும் அரிசி உணவுகள்
சாஸுடன் கூடிய கோழி மற்றும் மாட்டிறைச்சி போன்ற புரதம் நிறைந்த உணவுகள்
உடனடி ஆற்றல் தரும் ஸ்நாக் பார்கள் மற்றும் ட்ரெயில் மிக்ஸ் (Snack bars and trail mix). ‘ஸ்நாக் பார்கள்’ என்பது பழங்கள், நட்ஸ், தானியங்களால் ஆன சிறிய உணவு துண்டுகள். ‘ட்ரெயில் மிக்ஸ்’ என்பது உலர்ந்த பழங்கள், வறுத்த நட்ஸ், விதைகள் கலந்த ஒரு சுவையான கலவை.
மேலும் இவர்கள் விண்வெளியில் தாவர வளர்ப்பையும் பரிசோதித்தனர். ‘லெட்டஸ்’ எனப்படும் ஒரு வகை கீரை மற்றும் முள்ளங்கி போன்ற புதிய பச்சை காய்கறிகளையும் வளர்த்து சாப்பிட்டனர். இது புதிய காய்கறியின் சுவையை அவர்களுக்கு அளித்தது.
நடனமாடி வரவேற்ற டால்பின்கள்
இந்திய நேரப்படி மார்ச் 19 ( இன்று) அதிகாலை 3.27 மணிக்கு (IST), க்ரூ-9 டிராகன் விண்கலம் மெக்ஸிகோ வளைகுடாவில் தரையிறங்கியபோது, சுனிதா, வில்மோர், நிக் ஹேக் மற்றும் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோருக்கு ஒரு ஆச்சரிய வரவேற்பு காத்திருந்தது. மீட்பு குழு நெருங்கியபோது, டால்பின்கள் விண்கலத்தை சுற்றி நீந்தின. அவற்றின் அழகிய நடனம் கேமராவில் பதிவானது. சுனிதா புன்னகையுடன் வெளியேறி, கைகளை அசைத்து, கட்டைவிரலை உயர்த்தி தன் மனோபலத்தை வெளிப்படுத்தினார்.
உடல் நல சவால்கள்
பூமியில், சுனிதாவுக்கு மறுவாழ்வு ஒரு புதிய சவால். விண்வெளியில் அவர்சந்தித்த ஒன்பது மாத மைக்ரோகிராவிட்டி அவரது எலும்பு அடர்த்தியை மாதம் 1-2% குறைத்து, தசைகளை பலவீனப்படுத்தி, பார்வையை பாதிக்கச் செய்திருக்கும். மேலும், கதிர்வீச்சு பாதிப்பும் ஏற்பட்டிருக்கும். அவர் இதிலிருந்து மீண்டு வருவது வலி நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் இது எதிர்கால விண்வெளி பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்!