இந்திய பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்ட பெரும் சரிவு ரூ.19 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன் தாக்கம் இன்று காலையில் ஆசியப் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கத் தொடங்கியது.
அந்த வகையில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று ( ஏப்ரல் 7 ) காலை இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின. வர்த்தக துவக்கத்தின் போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிந்து 71,985 என்ற அளவில் தொடங்கியது. அதேபோன்றூ தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 900 புள்ளிகள் குறைந்து 21,758 என்ற அளவிற்கு வீழ்ந்தது.
இதன் விளைவாக, ஒரே நாளில் ரூ.19 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டதோடு, பங்குச் சந்தை, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்தது. பயத்தைக் குறிக்கும் வி.ஐ.எக்ஸ் (VIX) குறியீடு 50% உயர்ந்து, பங்குச் சந்தையில் பீதி நிலவுவதை உறுதிப்படுத்தியது.
“கருப்பு திங்கள்” ( Black Monday) என இன்றைய நிகழ்வை அழைக்கும் பங்குச் சந்தை நிபுணர்கள், இதன் பின்னால் உள்ள முக்கிய காரணங்களை விவரிக்கிறார்கள். அவை இங்கே…
உலகளாவிய சந்தைகளின் சரிவு
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் உருவான பதற்றம் உலக சந்தைகளை பாதித்தது. அமெரிக்க சந்தைகளில் 4% சரிவு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 4-8% வீழ்ச்சி என உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகள் சரிந்தன. இது இந்தியாவிலும் எதிரொலித்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) பெருமளவு பங்குகளை விற்றனர்.
ட்ரம்பின் வரி சுமை அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த புதிய இறக்குமதி வரிகள் (tariffs) உலக வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே பரவியது. இந்தியாவின் ஐ.டி மற்றும் உலோகத் துறைகள், அமெரிக்க சந்தையை பெரிதும் சார்ந்துள்ளதால், இவை முறையே 7% வரை சரிந்தன. இது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் வீழ்ச்சியை துரிதப்படுத்தியது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்திய பங்குகளை பெருமளவு விற்றதால் சந்தையில் பணப்புழக்கம் குறைந்தது. இதுவரை 2025 ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை அச்சம் இதற்கு காரணமாக அமைந்தது.
ரூபாய் மதிப்பு சரிவு
இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக 41 பைசா சரிந்து 85.65 என்ற அளவிற்கு தொடங்கியது. இது 2025 பிப்ரவரிக்குப் பிறகு மிக மோசமான தொடக்க சரிவாகும். ரூபாய் மதிப்பு குறைவு முதலீட்டாளர் நம்பிக்கையை பாதித்து, சந்தையில் பீதியை அதிகரித்தது.
உள்ளூர் பொருளாதார அழுத்தங்கள்
இந்தியாவில் உயர்ந்து வரும் பணவீக்கம், வேலையின்மை மற்றும் கொள்கை நிச்சயமின்மை ஆகியவை உள்ளூர் முதலீட்டாளர்களையும் பாதித்தன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் (small caps) 7% வரை சரிந்து, பரவலான விற்பனையை தூண்டின.

சந்தையில் ஏற்பட்ட 10 முக்கிய மாற்றங்கள்
கிஃப்ட் நிஃப்டி ( GIFT NIFTY) சரிவு: 900 புள்ளிகள் குறைந்து சந்தையின் பலவீனத்தை சுட்டிக்காட்டியது.
வி.ஐ.எக்ஸ் (VIX) உயர்வு: 50% அதிகரித்து முதலீட்டாளர் பயத்தை உறுதிப்படுத்தியது.
சென்செக்ஸ் 5% வீழ்ச்சி: 71,985 என்ற அளவில் தொடங்கி 9 மாத வீழ்ச்சியை எட்டியது.
நிஃப்டி 5% சரிவு: 21,758 என்ற அளவிற்கு குறைந்தது.
சிறு பங்குகள் பாதிப்பு: 7% சரிவுடன் மிகப்பெரிய இழப்பை சந்தித்தன.
உலோகம் மற்றும் ஐ.டி துறை சரிவு: 7% வரை குறைந்து முதலீட்டாளர் நம்பிக்கையை இழந்தன.
உலக சந்தைகள் பாதிப்பு: அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் 4% சரிவு, ஆசியாவில் 4-8% வீழ்ச்சி.
ரூபாய் பலவீனம்: 85.65 என்ற அளவிற்கு வீழ்ந்தது.
முதலீட்டாளர் செல்வ இழப்பு: ரூ.19 லட்சம் கோடி ஒரே நாளில் அழிந்தது.
Black Monday பயம்: 1987 ஆம் ஆண்டு சரிவை நினைவூட்டியது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த சரிவு உலகளாவிய மற்றும் உள்ளூர் காரணிகளின் கூட்டு விளைவால் ஏற்பட்டது என்கிறார்கள் சந்தை நிபுணர்கள். ட்ரம்பின் வரி அறிவிப்பு, FII விற்பனை, ரூபாய் பலவீனம் மற்றும் உள்ளூர் பொருளாதார அழுத்தங்கள் போன்றவை பங்குச் சந்தையை பாதித்துள்ளன. முதலீட்டாளர்கள் இப்போது “Wait and see” என்ற உத்தியை கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எதிர்காலத்தில், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அரசின் தலையீடுகள் சந்தையை ஸ்திரப்படுத்த உதவலாம். இருப்பினும், உலகளாவிய வர்த்தகப் போர் தீவிரமடைந்தால், மேலும் சரிவுகளை தவிர்க்க முடியாது. எனவே முதலீட்டாளர்கள் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு தங்களது முதலீட்டு உத்திகளைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்பதே பங்குச் சந்தை நிபுணர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.