இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மாற்றமாக அந்நாட்டின் அதிபராக பதவியேற்கும் முதல் இடதுசாரித் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறர் ஜேவிபி தலைவரான அனுர குமார திஸாநாயக்க.
ஒரு எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வந்த, அனுர குமார திஸா நாயக்க, சர்வதேச நாடுகள் மிக உன்னிப்பாக உற்று நோக்கிய அதிபர் தேர்தலில், வலதுசாரி மற்றும் முதலாளித்துவ ஆதரவு கட்சி வேட்பாளர்களை வீழ்த்தி, இலங்கை அதிபராக பொறுப்பேற்கும் முதல் இடதுசாரி தலைவராக உருவெடுத்துள்ளார்.
இலங்கையின் 9 ஆவது அதிபர் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், அன்று இரவே 9 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. 12 மணி முதல் முடிவுகள் வெளியாகத் துவங்கின. இதில், மொத்தமுள்ள 22 தோ்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், தேர்தலில் மொத்தம் போட்டியிட்ட 38 வேட்பாளர் களில், ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றார்.
வீழ்த்தப்பட்ட வலதுசாரிகள்
அதிபர் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க 56 லட்சத்து 34, 915 வாக்கு களையும் (42.3 சதவிகிதம்) சஜித் பிரேம தாச 43 லட்சத்து 63, 035 வாக்குகளையும்(32.76 சதவிகிதம்) பெற்றனர்.
சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், சில அரசியல் கட்சிகளும், சமூக அமைப்பு களும் இணைந்து நிறுத்திய தமிழரசுக் கட்சி ஆதரவாளர் பா. அரியநேந்திரன் பாக்கியசெல்வம், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச, தமிழ் வேட்பாளர் திலகர் உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களையே பெற முடிந்தது. எனினும் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெறவில்லை.
முடிவை தீர்மானித்த விருப்ப வாக்குகள்
இலங்கைத் தேர்தலைப் பொறுத்தவரை 50 சதவிகிதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்றால் தான் ஒருவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இல்லையெனில், வாக்காளர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது முன்னுரிமை தேர்வு வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதில், முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்த வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாவது சுற்று வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் இலங்கையில் இதுவரை எந்தத் தேர்தலும் இரண்டாவது சுற்று முன்னுரிமை வாக்கு எண்ணிக்கைக்குச் சென்றதில்லை. ஆனால், தற்போது முதன்முறையாக இந்த தேர்தலில், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குச் சென்றது. இதில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று ஜேவிபி தலைவர் அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாகவும், சஜீத் பிரேமதாச இரண்டாமிடத்தையும், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க மூன்றாம் இடம் பெற்றதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திஸா நாயக்க வென்றது எப்படி?
அனுர குமார திஸாநாயக்க, 2022 ஆம் ஆண்டு, இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்ட போது, மக்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். இது ஜேவிபி-க்கு ஆதரவுத் தளத்தை உருவாக்கியது. அவர் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) கட்சியின் தலைவர் என்றாலும், இந்த தேர்தலில், 27 சிறு அமைப்புக்களை இணைத்துக் கொண்டு ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற கூட்டணி சார்பில் களமிறங்கி யிருந்தார். ‘மாற்றம் ஒன்றே தீர்வு’ என்ற முழக்கத்தையும், ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ உத்தரவாதத்தையும் முன்வைத்து தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்த முழக்கங்களின் மீது நம்பிக்கை கொண்ட இலங்கையின் இளை ஞர்கள், சிங்களர்கள், தமிழர்கள் என அனைத்து தரப்பினரும் அனுர குமார திஸாநாயக்கவுக்கு பெருவாரியான வாக்குகளை அள்ளித்தந்துள்ளனர். தென்னிலங்கை மட்டுமல்லாது, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் திஸாநாயக்க வுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
போராட்டத்துக்கு கிடைத்த பலன்
இலங்கையில் ஈழத் தமிழர்கள் ஆயுதப்போராட்டம் நடத்திய அதே கால கட்டத்தில், உழைக்கும் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஜேவிபி -யும் இலங்கையில் ஆயுதமேந்தி அர சுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி யது. பின்னர் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பியது. அப்போதிருந்து தொட ர்ச்சியாக தேர்தலில் போட்டியிட்டாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததில்லை.
கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலிலும் கூட 3.16 சதவிகித வாக்குகளையே பெற முடிந்தது. எனினும், 2022 ஆம் ஆண்டு இலங்கையில் பெரிய அரசியல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அதற்கு எதிரான போராட்டத்தில் ஜேவிபி தலைவரான அனுர குமார திஸாநாயக்க, பெரும் எண்ணிக்கையிலான மக்களை போராட்டக் களத்தில் திரட்டினார். அதற்கான பலனாகவே அவரை அந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர் இலங்கை மக்கள்!