Amazing Tamilnadu – Tamil News Updates

சீத்தாராம் யெச்சூரி: சென்னையில் பிறந்து ஜேஎன்யூ-வில் உருவான காம்ரேட்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயரிய தலைவராகவும், இடதுசாரி இயக்கத்தின் தனித்திறன் படைத் தலைவராகவும் திகழ்ந்த தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு அந்த கட்சிக்கு மட்டுமல்லாது, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

சமீப நாட்களாக நுரையீரல் பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக நாளை காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை டெல்லியில் உள்ள அவரது கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் வைக்கப்படும். மாலை 3 மணிக்கு மேல் அவரது விருப்பத்தின் படியே அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்பட உள்ளது.

சென்னையில் பிறந்தவர்

1952 ஆகஸ்ட் 12 அன்று சென்னையில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர் யெச்சூரி. அவரது தந்தை சர்வேஸ்வர சோமயாஜூலு யெச்சூரி; தாயார் கல்பகம் யெச்சூரி. இவர்களது பூர்வீகம் ஆந்திரப்பிரதேசத்தின் காக்கிநாடா ஆகும். சீத்தாராம் யெச்சூரியின் தந்தை ஆந்திரப்பிரதேச சாலைப்போக்குவரத்துக் கழகத்தில் ஒரு பொறியாளராக பணியாற்றியவர். அவரது தாயார் காக்கிநாடாவில் அரசு ஊழியராக பணியாற்றியவர்.

ஜேஎன்யூ-வில் தொடங்கிய பொது வாழ்க்கை

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் தொடர்ச்சியாக இந்திய மாணவர் சங்கத்தை பல ஆண்டுகள் வழிநடத்தி அகில இந்திய அளவில் சக்திமிக்க அமைப்பாக மாற்றியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1975 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்ட தோழர் சீத்தாராம் யெச்சூரி தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்டவர்.

1985 ஆம் ஆண்டு முதல் மத்தியக்குழு உறுப்பினராகவும் 1992 ஆம் ஆண்டு முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், 2015 முதல் பொதுச் செயலாளராகவும் செயலாற்றியவர். பல உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோடு நெருக்கமாக பழகியவர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடுகளில் கலந்து கொண்டு இன்றைய சூழ்நிலையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னுள்ள கடமைகளை அழுத்தமாக வலியுறுத்தியவர்.

இந்திரா காந்திக்கு எதிராக போராடியவர்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியதோடு, 1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், யெச்சூரி ஒரு மாணவர் குழுவை காந்தியின் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, ஜேஎன்யு வேந்தர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி அவரிடமே மனு கொடுத்தார்.

ஜே தீர்மானத்தை

பன்முக தலைவர்

கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் கடந்த 30 ஆண்டு காலமாக தனது முழு பங்களிப்பையும் செய்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி. குறிப்பாக, தத்துவார்த்த தளத்திலும், மதச்சார்பற்ற பன்முகத் தன்மை கொண்ட கூட்டாட்சி இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்பதிலும் முனைப்பு காட்டியவர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியராக செயலாற்றியுள்ளார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்துத்துவாவை எதிர்த்த போராட்டத்தில் கூடுதலான பங்களிப்பு செய்தவர்.

இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர். மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார். ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய பங்களிப்பு செய்தவர். தனது பல்வேறு பங்களிப்புகள் மூலம் பலதுறையினரோடும் உறவுகளை வளர்த்துக் கொண்டவர்.

ராகுல் காந்தியுடன் நெருக்கம்

2004 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டு, பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றபோது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை (CMP) வகுத்ததில் யெச்சூரியின் பங்களிப்பு மிக முக்கியமான தாக இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவை அப் பொழுது நிறைவேற்றப்படுவதற்கு இவரது கருத்தியல் அழுத்தம் மிக முக்கியமாக இருந்தது.

காங்கிரஸ் தலைவர்களிடையே, குறிப்பாக தலைவர் ராகுல் காந்தியிடம் மிகுந்த நெருக்கமான தோழமையைக் கொண்டிருந்தவர். ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கிணைப்பதில் அளப்பரிய பங்காற்றியவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டின் ஆசிரியராக அவர் பணியாற்றினார். எந்தவொரு சிக்கலான பிரச்னையையும் எளிமையாக எழுதுவதிலும், பேசுவதிலும் வல்லவர் அவர். இந்திய இலக்கியங்கள் அனைத்தையும் முழுமையாக உள்வாங்கியிருந்த யெச்சூரி, தன்னுடைய உரைகளிலும், எழுத்துக்களிலும் அதைப் பொருத்தமாக பயன்படுத்தும் திறன் கொண்டவர்.

போய் வாருங்கள் தோழர் யெச்சூரி… செவ்வணக்கம்!

Exit mobile version