அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
அவர் இன்று மாலை சிறையிலிருந்து விடுதலை ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் மனோகரா கார்னர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இன்னும் சில தினங்களில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்றும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்றும் ஏற்கெனவே செய்திகள் வெளியான நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது திமுக-வினரை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை ஆனால், அவரை மீண்டும் அமைச்சராக்கும் எண்ணத்திலேயே அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போடப்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்தது.
மீண்டும் அமைச்சராக தடை இல்லை
இந்த நிலையில், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் போன்று, செந்தில் பாலாஜிக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால், அவர் மீண்டும் அமைச்சராவார் என்று கூறப்படுகிறது.
அதற்கேற்ற வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ளதை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வருகிற அக்டோபர் 2 ஆம் தேதிக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்றும், அப்போது 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், இதில் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து ஆவடி சா.மு.நாசர் மீண்டும் அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர சேலம் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலரது பெயர்களும் அமைச்சர் பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த கால அமைச்சரவை மாற்றங்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 3 வருடங்கள் நிறைவு பெற்று 4 ஆவது ஆண்டில் சென்று கொண்டிருக்கிறது. தமிழக அமைச்சரவையை இதுவரை 4 முறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்துள்ளார். முதலாவதாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் சில மாதங்களில் 2-வது முறையாக மிகப்பெரிய அளவில் இலாகா மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் உள்ளிட்ட சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டன.
2022 ஆம் ஆண்டு டிசம்பரில் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டர். இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற்ற சில மாதங்களுக்குள் மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு மே மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது ஆவடி சா.மு.நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டது. அந்த சமயத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டது. இந்த துறையை பார்த்து வந்த மனோ தங்கராஜுக்கு பால் வளத்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையுடன் நிதித்துறையும் கிடைத்தது.
இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி 2024 பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.மீண்டும் இப்போது அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கான முடிவில் முதலமைச்சர் உள்ளார்.