Amazing Tamilnadu – Tamil News Updates

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: விமர்சனங்களும் பதிலடிகளும்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியதை திமுகவினர் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அத்துடன் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

அத்துடன், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் போன்று, செந்தில் பாலாஜிக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால், அவர் மீண்டும் அமைச்சராவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, “முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சீமான் விமர்சனமும் திமுக-வின் பதிலடியும்

இந்த நிலையில், முதலமைச்சரின் இந்த ட்விட்டர் பதிவு குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் சரக்கை கூடுதலாக விலைவைத்து விற்பனை செய்வது, 10 ரூபாயைக் கூட்டி விற்பது, நேரம்காலம் இல்லாமல் விற்பனை செய்வது, கள்ளச்சரக்கு ஓட்டுவது, இவையெல்லாம் தியாகத்தில் வருகிறது. எனவேதான், அவருடைய தியாகத்தைப் போற்றியுள்ளார்” எனக் காட்டமாக கூறினார்.

சீமானின் இந்த விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள திமுகவினர், ” ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சசிகலாவை வீட்டிலேயே நேரில் சந்தித்துப் பேசியதும், அவரை தியாகத் தலைவி எனப் புகழ்ந்ததெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது?” என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழிசை விமர்சனத்துக்கு காங்கிரஸ் பதிலடி

அதேபோன்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “முறைகேடு வழக்கில் கைதான செந்தில் பாலாஜியை உறுதியானவர் என்று முதல்வர் பாராட்டுவது வேடிக்கை. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார், தியாகி என்று கூறுவதற்கு? முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர்

471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடு மன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால், மத்திய அரசினால் அல்ல. எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார் எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு, ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை” எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, “பாஜகவினருக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சித்தராமையாவுக்கும், செந்தில் பாலாஜிக்கு ஒரு நீதியா ? ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற பாஜகவினரே உங்களது புனிதர் வேடத்தை கலைக்கிற வகையில் தான் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்புகளை வழங்கி வருகிறது” என்று காட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சி எதிர்கட்சியினரை அடக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை ஆகியவற்றை பயன்படுத்தி, வழக்குகள் பதிவு செய்து அடக்குமுறை ஏவிவிடப்பட்டு வருகிறது. இதில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி அமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது போல தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

கர்நாடகாவில் முதல்வர் பதவியை ரூபாய் 2500 கோடிக்கு ஏலம் விட்டதாக பாஜக தலைவர்களுக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் ? கர்நாடகத்தில் இருக்கிற எந்த பாஜக தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று எவராலும் மறுக்க முடியுமா?

மேலும், பாஜகவை சேர்ந்த ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, சுகந்து அதிகரி, எச்.டி. குமாரசாமி, அஜித்பவார், அசோக் சவான், நாராயண் ரானே மற்றும் சமீபத்தில் முனிரத்னா போன்ற ஊழல் கரைபடிந்தவர்கள் பாஜகவின் சலவை எந்திரத்தின் மூலமாக புனிதர்களாக மாற்றிய அதிசயத்தை நிகழ்த்திய பாஜகவினருக்கு ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை கொடுத்து அதானி, அம்பானி உள்ளிட்ட முதலாளித்துவ சக்திகளை வளர்த்து, தேர்தல் பத்திர நன்கொடையை குவித்துக் கொண்டு ஊழலுக்கு துணை போகும் ஆட்சி தான் இந்த பாஜக ஆட்சி” என்று மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version