ஒன்றிய அரசு மேற்கொள்ள இருக்கிற ‘நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை’ திட்டத்தினால், தமிழ்நாட்டுக்கு எப்படியெல்லாம் பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று விரிவாக விளக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த திட்டத்தின் பின்னால் தமிழ்நாட்டு மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பேராபத்தும் சூழ்ச்சியும் இருக்கிறது எனக் குற்றம் சாட்டினார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் சட்டசபையில் இன்று 2 தனித் தீர்மானங்களைக் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அப்போது பேசிய அவர், தொகுதி மறுவரையறை திட்டத்தை எதிர்ப்பது ஏன் என்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார்.
மக்கள் தொகையைக் குறைத்ததற்கான தண்டனையா?
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “தொகுதி மறுவரையறை என்ற திட்டத்தில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பேராபத்து – சூழ்ச்சி இருக்கிறது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்! தமிழ்நாட்டின் மீது – தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
இந்தியாவில் 1976-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை இடங்கள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு வந்தன. இவ்வாறு மறுநிர்ணயம் செய்யும்போது, மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறைக்கப்படுகிறது. அதாவது ‘மக்கள்தொகைக் கட்டுப்பாடு’ எனும் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி-மக்கள் தொகையை குறைத்துக் கொள்ளும் மாநிலங்களுக்குத் தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது.
இதனால் மக்கள் தொகை குறையும் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் ஆர்வம்செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசைப்பெறும்; அவற்றுக்கான பிரதிநிதித்துவம்அதிகமாகும். இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் – தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவை சந்திக்கும்.
தமிழ்நாடும் பீகாரும்
1971-ஆம் ஆண்டு தமிழ்நாடும் பீகாரும் கிட்டத்தட்ட ஒரேஅளவிலான மக்கள் தொகையைக்கொண்டிருந்ததால் மக்களவையில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான தொகுதிகளைக்கொண்டிருந்தன.
இன்று தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் பீகாரின் மக்கள் தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், ஒன்றிய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டில் தற்போதுள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை பல வடமாநிலங்களின் எண்ணிக்கையை விட விகிதாச்சாரத்தில் குறைந்து விடும்.
‘தமிழ்நாடு பலத்தை இழக்கும்’
இதனை நினைத்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைக்காக இவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை குறைத்துவிட்டால், உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைந்து விடுவார்கள். 39 எம்.பி-க்கள் இருக்கும் போதே ஒன்றிய அரசிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம். இதிலும் குறைந்தால் என்ன ஆகும்? தமிழ்நாடு, கோரிக்கை வைக்கும் பலத்தை இழக்கும். அதனால் உரிமைகளை இழக்கும். இதனால் தமிழ்நாடு பின் தங்கி விடும்” என எச்சரித்தார்.
எனவே, இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்துவரும் கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் செயல் எதையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர், அல்லாது போனால், மக்களாட்சியின் ஆதாரப் பண்பையே அது நாசமாக்கிவிடும் என்றும், இதனால் ஏற்கெனவே கனல்வீசிக் கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வுகளை மேலும் வளர்ப்பது போலாகிவிடும் என்றும் கூறினார்.
நிறைவாக, இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்து வரும் கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் செயல் எதையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொண்ட அவர், அதிக தொகுதிகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவது கூட்டரசின் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகிவிடும் என்றும் கூறினார்.