Amazing Tamilnadu – Tamil News Updates

ரெப்போ வட்டி குறைப்பு: வீட்டுக் கடன் வட்டி குறையும்; ஆனால்…

ங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ( Repo rate) 6.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. 5 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையக் கூடும் என்பதோடு, பணப்புழக்கமும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் என்றால் என்ன?

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தின் கடைசி நாளான நேற்று ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இதுவரையில், 6.5 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி தற்போது 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 6 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதற்கும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரச் செய்தது. இந்த நிலையிலேயே ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்பட்டது. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் தொழில் வளர்ச்சியை முடுக்கிவிடும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2020 மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் 40 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4% ஆக இருந்த நிலையில் தற்போது இந்த 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு என்ன பயன்?

ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தைக் குறைக்கும்போது, ​​வங்கிகள் பொதுவாக தங்கள் கடன் விகிதங்களைக் குறைத்து, வீட்டுக் கடன்களை மலிவானதாக ஆக்குகின்றன.

இதனால் ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு, அவர்கள் செலுத்த வேண்டிய வங்கிக் கடனுக்கான தவணைத் தொகை (EMI)குறையும் அல்லது கடன் செலுத்த வேண்டிய கால அளவு குறையும். குறிப்பாக வீட்டுக்கடனை ஃப்ளோட்டிங் ரேட்டிங்கில் வாங்கியிருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

“ஒருவர் 8.75% வட்டியில் 20 வருட வீட்டுக் கடனைப் பெற்று மார்ச் மாதத்திற்குள் 12 இஎம்ஐ-களைச் செலுத்தியிருந்தால், ஏப்ரல் மாதத்திலிருந்து அவருக்கான வட்டி விகிதம் ஒரு லட்சத்திற்கு 8,417 வரை குறையும். 50 லட்சம் கடனில், இது தவணைக் காலத்தில் 4.20 லட்சம் ரூபாய் அளவுக்கு சேமிப்பைக் கொடுக்கும். இஎம்ஐ-யைக் குறைக்காமல் செலுத்தினால், கடன் காலத்தில் 10 இஎம்ஐ-கள் குறையும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

மேலும் வட்டி விகிதம் குறைவதால் புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களும் ஆர்வமுடன் முன்வருவார்கள்.

பாதகம் என்ன?

அதே சமயம், தங்களது சேமிப்புத் தொகையை ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டு வங்கி வட்டி மூலம் தங்களது வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு ரெப்போ விகிதம் குறைப்பு, அவர்களுக்கான வட்டி வருமானத்தைக் குறைத்துவிடும்.

Exit mobile version