டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், மூத்த தொழிலதிபருமான ரத்தன் டாடா புதன்கிழமை இரவு காலமானார். டாடா நிறுவனத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற அவரின் வயது 86. பத்ம விபூஷண் விருது பெற்ற அவர், வயது மூப்பால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 11.30 மணியளவில் காலமானார்.
டாடா குழுமத்தை 21 ஆண்டுகள் வழிநடத்திய ரத்தன் டாடா, இந்தியர்களின் இதயம் கவர்ந்த பிசினஸ் ஜாம்பவானாக உருவெடுத்தது எப்படி என்பது குறித்த ஒரு டைம் லைன் இங்கே…
1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ல் பிறந்த ரத்தன் டாட மும்பையில் ( அப்போது பம்பாய்), இந்தியாவின் மிகப் பிரபலமான வணிகக் குடும்பங்களில் ஒன்றான டாடா குடும்பத்தில் பிறந்தார். அவர் 10 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் பிரிந்த பிறகு அவரது பாட்டி நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்டார். அவர் டாடா குழுமத்தை நிறுவிய ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன் ஆவார்.
ஆரம்பக் கல்வியை, ரத்தன் டாடா மும்பை கேம்பியன் பள்ளி, கதீட்ரல் பள்ளி மற்றும் மும்பையில் உள்ள ஜான் கானான் பள்ளி மற்றும் சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளி ஆகியவற்றில் படித்தார். 1955 ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரிவர்டேல் கன்ட்ரி பள்ளியில் டிப்ளோமா பெற்றார். பின்னர் அவர் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலுக்கு படிக்க சென்றார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் பட்டப்படிப்பு படித்தார்.
பலரது வேலைவாய்ப்பு கனவாக இருந்த பிரபல IBM நிறுவனத்தில் வேலையில் சேர வாய்ப்பு கிடைத்தும் ரத்தன் டாடா அதனை நிராகரித்தார். ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், 1961 ல் டாடா குழுமத்தில் சேர்ந்தார். டாடா இண்டஸ்ட்ரீஸில் உதவியாளராகச் சேர்ந்தார்.
1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது. 1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார். கோரஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.
1991 ஆம் ஆண்டில், ரத்தன் டாடா, ஜேஆர்டி டாடாவால் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, குழுமத்தின் தலைவரானார். அதாவது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது கொள்ளு தாத்தாவால் நிறுவப்பட்ட குழுவை 2012 வரை நடத்தினார்.
ரத்தன் டாடா தனது வணிக புத்திசாலித்தனத்திற்காக மட்டுமல்ல, டாடா குழுமம் மற்றும் இந்திய தொழில்துறையை மறுவடிவமைத்த ஒரு ரிஸ்க் எடுப்பவராகவும் கொண்டாடப்படுகிறார். சவால்களை ஏற்றுக்கொள்வதிலும், துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பதிலும் அவர் காட்டிய ஆர்வமே டாடா குழுமத்தை ஒரு மாபெரும் தொழில் சாம்ராஜ்யமாக உருவெடுக்க பெருமளவில் உதவியது.
1990-களின் தொடக்கத்தில் இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கலில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியபோது டாடா குழுமத்தை மறுசீரமைக்கத் தொடங்கினார். மேலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட முதல் கார் மாடலான டாடா நானோ மற்றும் டாடா இண்டிகா உள்ளிட்ட பிரபலமான கார்களின் வணிக விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
உலகெங்கிலும் உள்ள பல ஹோட்டல்கள், இரசாயன நிறுவனங்கள், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் மற்றும் எரிசக்தி சப்ளை நிறுவனங்கள் போன்றவற்றையும் வாங்குவதில் ஆர்வம் காட்டினார். =மிட்சுபிஷி கார்ப்பரேஷன் மற்றும் ஜேபி மோர்கன் சேஸின் சர்வதேச ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றினார்.
ஜேஆர்டி டாடாவால் 1932 இல் நிறுவப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை 2022 ல் மீண்டும் டாடா குழுமத்திற்கே கைப்பற்றியது, அவரது முன்னோர்களை கௌரவிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது. லென்ஸ்கார்ட், பேடிஎம், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி மற்றும் அப்ஸ்டாக்ஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களிலும் டாடா குழுமத்தை முதலீடு செய்ய வைத்தார்.
2012 ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவரது தலைமையில் குழுமத்தின் வருவாய் 1991 ஆம் ஆண்டு வெறும் ரூ. 10,000 கோடியில் இருந்து 2011-12ல் மொத்தம் $100.09 பில்லியன் (சுமார் ரூ. 475,721 கோடி) என பன்மடங்கு வளர்ந்தது.
பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம விபூஷன் உட்பட பல சர்வதேச மற்றும் தேசிய விருதுகளை ரத்தன் டாடா வென்றுள்ளார்.