பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான உட்கட்சி மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
மே 11 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி, இருவரும் தனித்தனியாக வெளியிட்ட பாடல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. “அண்ணா அழைக்கிறார்” என அன்புமணியை முன்னிலைப்படுத்திய முதல் பாடலுக்கு எதிர்வினையாக, “அய்யா அழைக்கிறார், ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா” என ராமதாஸை மையப்படுத்தி இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது.
இந்தப் பாடல், சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவந்ததாகக் கூறப்பட்டாலும், “தந்தை – மகனுக்கும் இடையேயான மோதல் அத்தனை சுலபத்தில் முடிவுக்கு வருவதாக தெரியவில்லையே” என வருத்தம் மேலிடக் கூறுகின்றனர் கட்சி நிர்வாகிகள்.
உட்கட்சி மோதலின் பின்னணி
2024 டிசம்பரில் புதுச்சேரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பகிரங்க மோதல் வெடித்தது. ராமதாஸ், தனது மகள் வழி பேரன் பரசுராமன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமித்தபோது, அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” இது நான் ஆரம்பித்த கட்சி. எனவே பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக்கொள்கிறேன். பாமக தலைவராக இருந்த அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். கௌரவத் தலைவராக ஜி.கே.மணியை நியமிக்கிறேன்” எனக் கூறினார்.
ஆனால் அன்புமணி, “நான் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவன், தலைவராகத் தொடர்வேன்,” என அறிக்கை வெளியிட்டார். பாமக பொருளாளர் திலகபாமா, ராமதாஸின் முடிவை “ஜனநாயகக் கொலை” என விமர்சித்து, அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்தார். இவ்வாறு இருவருக்கும் இடையேயான மோதல் அவ்வப்போது வெடித்துக் கிளம்புவதும் பின்னர் அடங்குவதுமாகவே தொடர்ந்தது.

சித்திரை மாநாடு பாடல் சர்ச்சை
12 ஆண்டுகளுக்குப் பிறகு மாமல்லபுரம், திருவிடந்தையில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு, பாமகவின் அரசியல் வலிமையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக 7 பாடல்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாடல் “அண்ணா அழைக்கிறார்” என அன்புமணியை முன்னிலைப்படுத்தியது. இதில் ராமதாஸின் புகைப்படம் ஒரு இடத்தில் மட்டுமே இடம்பெற்றது. இது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலடியாக, ராமதாஸ் தனியாக வெளியிட்ட இரண்டாவது பாடல், “அய்யா அழைக்கிறார்” எனத் தொடங்கி, அன்புமணியின் படத்தை முற்றிலும் தவிர்த்தது. இந்தப் பாடல் சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவந்ததாக அன்புமணி தரப்பில் அறிவித்தாலும், கட்சிக்குள் பிளவு தொடர்வதாக கட்சியின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டின் முக்கியத்துவம்
சித்திரை முழு நிலவு மாநாடு, சாதிவாரி கணக்கெடுப்பு, 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு, மது ஒழிப்பு, சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்துவதாக அமையும் என பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி, “இந்த மாநாடு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது, யாருக்கும் எதிரானது அல்ல,” எனவும், ராமதாஸ், “பட்டியலின சமூகத்தினர் உட்பட அனைவரும் பங்கேற்க வேண்டும்,” எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். மாநாட்டை “கோவில் கும்பாபிஷேகம் போல்” நடத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ராமதாஸ், “இதுவரை நடந்தவற்றை விட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்” என அறிவித்துள்ளார்.
கட்சியின் எதிர்காலம்
இந்த நிலையில், “ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் நீடித்தால் அது, பாமகவின் தொண்டர்களை பிளவுபடுத்தி, 2026 தேர்தலில் பாமகவின் கூட்டணி முடிவுகளை பாதித்து, கட்சியின் வெற்றி வாய்ப்புகளையும் பலவீனப்படுத்தலாம்” எனக் கவலை தெரிவிக்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.
“2026-ல் நம் தலைமையில் ஆட்சி அமையும்,” என இருவரும் முழங்கினாலும், கட்சிக்குள் ஒற்றுமை இல்லாதது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உள்வட்டார தகவலின்படி, ராமதாஸ் கூட்டணி முடிவுகளை தீர்மானிக்க விரும்புகிறார். ஆனால் அன்புமணியின் ஆதரவாளர்கள் இதை எதிர்க்கின்றனர். அன்புமணியின் மனைவி சௌமியா, மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி, அவரது செல்வாக்கை வலுப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் இளைஞர் ஆதரவும் ஒருங்கிணைந்தால் மட்டுமே பாமக தனது செல்வாக்கை மீட்டெடுக்க முடியும். சித்திரை மாநாடு, இந்தப் பிளவை முடிவுக்கு கொண்டுவருமா என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்!