தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ‘ராயன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஜூலை 26 ஆம் தேதி வெளியான இப்படம், தொடர்ந்து எதிர்பார்ப்புகளை முறியடித்து, பல சாதனைகளை எட்டி உள்ளது.
தனுஷ் நடிப்பில் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தை ஏற்கனவே பெற்றுள்ள இப்படம், இன்னுமொரு முக்கிய சாதனையையும் எட்டியுள்ளது. அது, 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இதுவரை இருந்து வந்த ‘அரண்மனை 4’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
‘அரண்மனை 4’ படத்தின் சாதனை முறியடிப்பு
தமிழ்நாட்டில் மட்டும் ‘ராயன்’ ரூ. 68.43 கோடி வசூலை குவித்துள்ளது. சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில், தமன்னா மற்றும் ராஷி கன்னா உள்ளிடோரும் நடித்திருந்த ‘அரண்மனை 4’ திரைப்படம், தமிழ்நாட்டில் 67.10 கோடி ரூபாய் மொத்த வசூலுடன் தற்போது அதிக வசூல் பட்டியலில் 2 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
தனுஷின் வெற்றி தமிழகத்தையும் தாண்டியுள்ளது. இந்திய அளவில் 12 நாட்களில் 81.05 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோன்று வெளிநாடுகளிலும் ரூ. 36.50 கோடி வசூலித்த நிலையில், அதன் மொத்த வசூல் இப்போது ரூ. 132.13 கோடியாக அதிகரித்துள்ளது.
‘இந்தியன் 2’ யையும் முந்தும்
‘ராயன்’ பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்து வருவதால், அதன் அடுத்த வசூல் சாதனை என்னவாக இருக்கும் எனத் திரையுலகமும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘இந்தியன் 2 படத்தின்’ வசூலான 150.94 கோடியையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்த முதல் 10 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் இங்கே:
இந்தியன் 2: ரூ. 150.94 கோடி
ராயன்: ரூ. 132.13 கோடி
மகாராஜா: ரூ. 109.13 கோடி
அரண்மனை 4: ரூ. 100.24 கோடி
அயலான்: ரூ. 76.41 கோடி
கேப்டன் மில்லர்: ரூ. 67.99 கோடி
கருடன்: ரூ. 60.20 கோடி
லால் சலாம்: ரூ. 33.65 கோடி
நட்சத்திரம்: ரூ. 25.92 கோடி
சைரன்: ரூ. 20.13 கோடி
‘ராயன்’ வசூல் தொடர்ந்து இதே நிலையில் தொடர்ந்தால், அது நிச்சயம் இந்த ஆண்டின் அதிக வசூல் தமிழ் பட பட்டியலில் முதலிடம் பெறும் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் தமிழ்த் திரையுலகினர்.