டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், அது சார்ந்த தொழில் நுட்பங்கள் போன்றவற்றில் அவ்வப்போது புதுப்புது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது சீனா.
அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் சீனா அறிமுகப்படுத்திய புதிய ஏஐ மாடலான ‘டீப்சீக்’ (Deepseek), ஏஐ தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஓபன் ஏஐ – சாட்ஜிபிடி, கூகுள் – ஜெமினி போன்ற அமெரிக்க நிறுவனங்கள் மிரண்டு போக வைத்தது.
சாட்ஜிபிடி,ஜெமினி மற்றும் கிளாட் (ChatGPT, Gemini, and Claude ) போன்ற பிற முன்னணி AI மாடல்களை சீனாவின் ‘டீப்சீக்’ விஞ்சி இருப்பதாகவும், AI உலகில் அது ஒரு கேம்-சேஞ்சராக பார்க்கப்படுவதாகவும் வல்லுநர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.
குவாண்டம் கணினியில் சீனாவின் சாதனை
இந்நிலையில், சீனா அதன் அடுத்தகட்ட சாதனையாக கூகுள் சூப்பர் கணினியை விட சிறப்பாக செயல்படும் சிறப்பு கணினியை உருவாக்கி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதாவது, கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டர் மட்டுமே அதிவேகமான குவாண்டம் செயல்பாடு கொண்டது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதைவிட 10 லட்சம் மடங்கு அதிகமான செயல்திறன் கொண்டு இயங்கக்கூடிய ஜூச்சோங்ஷி -3 (Zuchongzhi-3) என்ற குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது.
மேலும், கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டர் 10,000 ஆண்டுகளில் செய்யும் பணிகளை 200 நொடிகளில் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது அதே பணியை ஜூச்சோங்ஷி -3 கம்ப்யூட்டர், வெறும் 14 வினாடிகளில் செய்து முடிக்கும் திறன் கொண்டது என இதனை கண்டுபிடித்த சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (University of Science and Technology of China -USTC ) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் வாசிப்பு துல்லியம் மற்றும் கட்டுப்பாட்டு துல்லியத்தின் அடிப்படையில், இந்த இயந்திரம் புதிய உயரங்களை எட்டியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
குவாண்டம் கணிப்பொறி (Quantum Computing) என்பது குவாண்டம் இயற்பியலின் அடிப்படையில் கணிப்புகளை நடத்தும் புதிய தொழில்நுட்பம் ஆகும். இது கணிப்பின் வேகத்தையும் திறனையும் முற்றிலும் மாற்றக்கூடிய சக்தியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சீனாவின் தற்போதைய சாதனை, அந்த நாட்டை உலகின் முன்னணி குவாண்டம் கணினி தேசமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
உலகளவில் நடந்திருக்கும் முன்னேற்றங்கள்
சீனாவின் தற்போதைய சாதனை ஒரு பக்கம் இருந்தாலும், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளும் குவாண்டம் கணிப்பில் பெரிய முன்னேற்றங்களை கண்டுள்ளன.
கூகுள் – ‘Willow’ என்ற புதிய குவாண்டம் புராசஸரை உருவாக்கி, பிழை திருத்தம் (error correction) மற்றும் ஸ்கேல்பிளிட்டி (scalability) மேம்படுத்தியுள்ளது.
அதேபோன்று மைரோசாஃப்ட் – ‘Majorana 1’ என்ற புதிய ‘குவாண்டம் சிப்’பை உருவாக்கி, தடையற்ற கியூபிட்கள் (topological qubits) கொண்ட திறனான கணிப்பை மேற்கொள்கிறது.
Amazon – ‘Ocelot’ என்ற புதிய குவாண்டம் தொழில்நுட்பத்தை வெளியிட்டு, கணிப்பின் வேகத்தை அதிகரிக்க முயல்கிறது.
இவ்வாறு உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் குவாண்டம் கணிப்பை வளர்த்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன.
குவாண்டம் கணினிக்கான சவால்கள்
தொழில்நுட்ப சிக்கல்கள் – கியூபிட்கள் (Qubits) சுற்றுச்சூழலால் எளிதில் பாதிக்கப்படுவதால், அவற்றை நிரந்தரமாக வைத்திருக்க பெரிய சவால் உள்ளது.பிழை திருத்தம் (Error Correction) – தவறுகளை குறைத்தால் மட்டுமே குவாண்டம் கணிப்புகள் நடைமுறை வசதியானதாக மாறும்.மிகப்பெரிய அளவிலான கணிப்புகளை மேம்படுத்துதல் (Scalability) – கணிப்புகளை வணிக ரீதியில் பயன்படுத்த பெரிய அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இந்த நிலையில், வல்லுநர்கள் “முழுமையான குவாண்டம் கணிப்பை பெற இன்னும் 10-20 ஆண்டுகள் தேவைப்படும்” என கணிக்கின்றனர்.
எதிர்கால கணினி உலகம் எப்படி இருக்கும்?
கணிப்புத் திறன் – குவாண்டம் கணிப்புகள் குறியாக்கம் (cryptography),மருந்து ஆராய்ச்சி (drug discovery) மற்றும் இயற்பியல் சிக்கல்களை தீர்ப்பதில் பெரும் உதவியாக இருக்கும். AI மற்றும் மெஷின் லேர்னிங்கில் (Machine Learning) இணைந்தால், மாபெரும் முன்னேற்றம் உருவாகும்.நாடுகளும், பெரிய நிறுவனங்களும் இதில் முதலீடு செய்தால், அவர்கள் உலகளவில் பொருளாதார மேலாதிக்கம் பெறலாம். குவாண்டம் கணிப்பில் முந்துபவர்தான் எதிர்காலத்தை கட்டுப்படுத்துவார்.
சீனாவின் புதிய குவாண்டம் அறிமுகமானது, உலகின் குவாண்டம் கணிப்பு போக்கில் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த போட்டியில் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் இடம் பிடிக்க முயல்கின்றன.
முடிவாக, குவாண்டம் கணிப்பின் வளர்ச்சி வெறும் கணினி மேம்பாட்டை மட்டுமல்ல, உலக அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பையே மாற்றக்கூடியது. இதற்கு முதலீடு செய்யும் நாடுகளே, எதிர்காலத்தில் கணிப்புத்துறையின் கட்டுப்பாட்டை பெற்றிருப்பார்கள் என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.