தமிழக அரசியலில் மற்றொரு புயலை கிளப்பியிருக்கிறார் திமுகவின் மூத்த தலைவரும் வனத்துறை அமைச்சருமான கே. பொன்முடி.
கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பொன்முடி, சைவம்-வைணவம் தொடர்பாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
இது திமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இந்த சர்ச்சையின் எதிரொலியாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொன்முடியை இன்று கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, திருச்சி சிவாவை அப்பதவிக்கு நியமித்துள்ளார்.
தொடர் சர்ச்சையில் பொன்முடி…
பொன்முடியின் பேச்சு, திமுகவின் மதச்சார்பற்ற கொள்கைக்கும், பெண்களுக்கு மரியாதை அளிக்கும் கட்சி என்ற நிலைப்பாட்டிற்கும் நேர்மாறாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கட்சியின் முக்கிய தலைவரான கனிமொழி, “பொன்முடியின் பேச்சு ஏற்க முடியாதது, இத்தகைய கொச்சையான வார்த்தைகள் கண்டிக்கத்தக்கவை” என பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது, கட்சிக்குள் பொன்முடிக்கு எதிராக எழுந்துள்ள அசாதாரணமான நிலையை வெளிப்படுத்துகிறது.
பொன்முடிக்கு இது புதிய சர்ச்சை அல்ல. இதற்கு முன்பு, மகளிர் இலவச பயணத் திட்டம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அங்கிருந்த பெண்களை “ஓசி பஸ்” என குறிப்பிட்டு பெரும் விமர்சனத்தை சந்தித்தவர். மற்றொரு முறை, வட இந்தியர்களை “பானிபூரி விற்பவர்கள்” என குறிப்பிட்டு இனவெறுப்பை தூண்டுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானார். இவை தவிர, மேலும் பலமுறை இத்தகைய சர்ச்சை பேச்சுகளில் சிக்கி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே பலமுறை பொன்முடியை இதற்காக கண்டித்த நிலையில், பொன்முடியின் இத்தகைய தொடர் சறுக்கல்கள் கட்சிக்கு தலைவலியாக இருப்பதாக திமுகவினர் கூறுகின்றனர் “பொன்முடியின் பேச்சு, கட்சியின் பிம்பத்திற்கு பெரும் களங்கம். இதை கவனிக்காமல் விட முடியாது,” என திமுக உயர்மட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் பதவி தப்புமா?
கனிமொழியின் கண்டனம், கட்சியின் மகளிர் ஆதரவு நிலைப்பாட்டை வலியுறுத்துவதாக இருந்தாலும், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டின் முன்னர் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பொன்முடி, தனது பேச்சு குறித்து விளக்கம் அளிப்பதற்காக விழுப்புரத்திலிருந்து சென்னை புறப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்துள்ள நிலையில், அவர் இந்த விவகாரம் குறித்து கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவோ இந்த வாய்ப்பை பயன்படுத்தி, “பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்; ஸ்டாலின் அவரை கைது செய்ய உத்தரவிடுவாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது. பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பொன்முடி தமிழக பெண்களை அவமதித்ததாக குற்றம்சாட்டி, இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளார்.“அமைச்சர் பதவியை பறிக்காமல், கட்சி பதவியை மட்டும் நீக்குவது ஒரு சமரச முடிவு,” என பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
பொன்முடி திருக்கோயிலூர் எம்எல்ஏ-வாக உள்ளார். இவர் மீது அண்மையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பின்னர் அவருக்கு மீண்டும் வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சர்ச்சை பேச்சால் அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் முடிவு என்ன?
பொன்முடியை அமைச்சராக தொடர அனுமதிப்பது, மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மற்றும் சைவ-வைணவ பக்தர்கள் மத்தியில், திமுக மீதான நம்பிக்கையை குறைக்க வைக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில், “பொன்முடியை பதவி நீக்க வேண்டும்” என்ற கோரிக்கைகள் பரவி வருகின்றன.
பெண்ணியவாதிகள், “இத்தகைய பேச்சு, பெண்களுக்கு எதிரான வன்மத்தை வெளிப்படுத்துகிறது” என கண்டனம் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த சர்ச்சை திமுகவின் ஆதரவு தளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.இந்த விவகாரத்தில் திமுக தலைமை எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை முக்கியமானது.
ஸ்டாலின் முன் இப்போது ஒரு கடினமான தேர்வு உள்ளது – கட்சியின் ஒற்றுமையா, மக்களின் நம்பிக்கையா? பொன்முடியின் அமைச்சர் பதவி தப்புமா, இல்லையா? பதில், அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.