ராமதாஸ் – அன்புமணி மோதல் பின்னணி… புதிய கட்சிக்குத் திட்டமா?

புதுச்சேரியில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் மேடையிலேயே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் பாமக-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாமக நிறுவன தலைவரான டாக்டர் ராமதாஸுக்கும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடங்கி தேர்தல் கூட்டணி வரை சமீப காலமாக கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு வருவதாக அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கூட அதிமுக உடன் கூட்டணி அமைக்கவே டாக்டர் ராமதாஸ் விரும்பியதாகவும், அதன்படியே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உடன்பாடு ஏற்பட்டதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அன்புமணியின் பிடிவாதம் காரணமாகவே பாஜக உடன் பாமக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாமக ஒரு இடம் கூட வெற்றி பெறாமல் போனது அக்கட்சியினர் இடையே ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியது. தோல்விக்கு காரணம், வன்னியர்களின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவே என்றும், காலம் காலமாக பாமக-வுக்கு வாக்களித்த வன்னியர்கள் மாற்று கட்சிகளுக்கு வாக்களிக்கத் தொடங்கிவிட்டதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேடையில் வெடித்த மோதல்

இத்தகைய சூழ்நிலையில் தான், புதுச்சேரியில் இன்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். இதனை அன்புமணி ஏற்க மறுத்தார்.

“கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்காதீர்கள். அவருக்கு என்ன அனுபவம் இருக்கும், களத்தில் இருத்து வேலை செய்வதற்கு..? அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த ராமதாஸ், “நான் சொல்வதை தான் யாராக இருந்தாலும் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. புரியுதா? கட்சியை விட்டு போவதாக இருந்தால் போ” எனக் கூறினார். அப்போது அன்புமணி, “நீங்கள் சொல்லுங்கள், பண்ணுங்கள்…” என்று பதில் அளித்தார். இதனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

தந்தையின் பேச்சால் அதிருப்தி அடைந்த அன்புமணி, “பனையூரில் தனியாக அலுவலகம் திறந்து இருக்கிறேன். என்னை வந்து சந்திப்பதாக இருந்தால் அங்கு வரலாம்” எனக் கூறி, அது தொடர்பாக தொடர்புகொண்டு பேச தொலைபேசி எண்ணையும் அறிவித்தார்.

தனி அணியா… புதுக் கட்சியா?

இந்த நிலையில், இந்த மோதல் குறித்துப் பேசும் தமிழக அரசியல் நோக்கர்கள், “2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம் என திமுக கங்ஙகணம் கட்டிக் கொண்டு, கட்சி நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளது. மறுபுறம் நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகமும் பாமக வாக்கு வங்கியை, குறிப்பாக வன்னிய சமூக இளைஞர்கள் வாக்கு வங்கியைப் பதம் பார்க்கும் நிலை உருவாகி உள்ளது. இன்னொரு புறம் தேர்தலில் வெற்றி பெற, குறிப்பாக வடமாவட்டங்களில் தலித் சமூக வாக்குகள் மிக அவசியம் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தி உள்ளன.

இதனை அன்புமணி ராமதாஸும் நன்கு உணர்ந்துள்ளதாக தெரிகிறது. அதனால் தான், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர், ‘பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம்’ என அறிவித்தார். பாமக மீது நீண்ட காலமாகவே ‘சாதி கட்சி’ என்ற முத்திரை இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என நினைக்கிறார் அன்பு மணி. மேலும் வட மாவட்டங்களைத் தாண்டி, தலித் சமுதாயத்தினர் உட்பட பல சமூக மக்களை இணைத்து தமிழகம் முழுவதுமே கட்சி வளர வேண்டும் என நினைக்கிறார்.

இதற்கு பாமக மீதான பழைய முத்திரை அகற்றப்பட வேண்டும். எனவே தான் தனது தலைமையில் பாமக-வுக்கு தனி அணியை உருவாக்குவது அல்லது தேவைப்பட்டால் வேறு பெயரில் புதிய கட்சியே தொடங்குவது என அன்புமணி திட்டமிட்டிருக்கலாம். அதனால் தான், முகுந்தன் நியமனத்தைக் காரணம் காட்டி அன்புமணி இந்த மோதல் நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம். அதன் காரணமாகவே அவர் பனையூரில் தனி அலுவலகம் தொடங்கி இருக்கலாம் ” என்கிறார்கள்

எது எப்படியோ…தமிழக அரசியல் களம் அடுத்த அரசியல் பரபரப்புக்குத் தயாராகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

mushroom ki sabji : 5 delicious indian mushroom recipes brilliant hub. Nj transit contingency service plan for possible rail stoppage. So, what’s next for kizz daniel ?  .