Amazing Tamilnadu – Tamil News Updates

‘தமிழகத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி…’ – அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வர் திடீர் அழைப்பு பின்னணி!

ரசியலமைப்புச் சட்டத்தின் 82 ஆவது பிரிவு, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்படி செய்தால் தமிழ்நாடு 8 மக்களவை தொகுதிகளை இழக்க நேரிடும். அதேபோன்று மக்கள் தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய இதர தென்மாநிலங்களும் கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும்.

2026-ஆம் ஆண்டு வரையிலும், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை, மாநிலங்கள் முனைப்போடு மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்த இலக்கை அடைவதில் அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளும் ஒரே அளவில் இல்லை.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள், மக்கள் தொகை வளர்ச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டதால்தான், இந்த வளர்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளது. இத்தகைய முன்முயற்சிகள் தான், நாட்டின் மொத்த மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாடு வளர்ச்சி அடைவதற்கான முக்கியக் காரணமாகவும் இருந்து வருகின்றன.

எனவே, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சியிலும் பெரும்பாங்காற்றி வரும் நமது மாநிலத்தை, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தண்டிக்க நினைப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல என தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் மக்களை தொகுதி எண்ணிக்கை குறைந்தால் தங்களது உரிமைக் குரலை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க முடியாத சூழலும் ஏற்பட்டுவிடும் என்றும் தென் மாநிலங்கள் கருதுகின்றன.

அதுமட்டுமல்லாது, மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைக்கும்போது வட மாநிலங்களின் எம்.பி.க்களின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரிக்கும். அது எந்த அளவுக்கு என்றால், தென்மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமலேயே மத்தியில் ஒரு கட்சி ஆட்சியமைத்துவிட முடியும். இது தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படும் சூழலுக்கு உள்ளாகிவிடும்.

மார்ச் 5 ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

இந்த நிலையில் தான், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வருகிற மார்ச் 5 ஆம் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதனை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 தொகுதிகளை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி தமிழகத்தில் 31 தொகுதிகள் தான் இருக்கும் என்ற சூழல் உருவாகும். மத்திய அரசு இதற்காக முயற்சித்து வருகிறது.

அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த கவலை மட்டும் அல்ல. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த கவலை என்பதை மறந்துவிடக் கூடாது.

இதனால், தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே வருகிற 5 ஆம் தேதி தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறோம். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளையும் அழைக்க முடிவு செய்து அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசியல் கடந்து, கட்சிகளை மறந்து பங்கேற்று குரல் கொடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version