Amazing Tamilnadu – Tamil News Updates

தொகுதி மறுசீரமைப்பும் தமிழகத்தின் எதிர்ப்பும் … கடந்த காலத்தில் நடந்தது என்ன?

டந்த 2023 ஆம் ஆண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டுவிட்ட உடன், மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதி எம்பி.-க்கள் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்வது குறித்த பேச்சுகள் எழுந்தன.

வடமாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு சரிவர செயல்படுத்தப்படவில்லை. ஆனால், அதை வெற்றிகரமாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்தன. இதன் அடிப்படையில், மக்களவை தொகுதி எம்.பி-க்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதால் அதற்கு தென் மாநிலங்கள் அப்போது எதிர்ப்பு தெரிவித்தன.

இதனையடுத்து இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தின் எம்.பி-க்களின் எண்ணிக்கையில் 8 தொகுதிகள் குறையும். இது, தமிழகத்துக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இது குறித்து விவாதிப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருகிற மார்ச் 5 ஆம் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்த செய்தி வெளியானதும், எக்ஸ் சமூக வலைதளத்தில் #FairDelimitationForTN என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த காலத்தில் நடந்தது என்ன?

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கடந்த காலத்தில் நடந்தது என்ன என்பது குறித்த சில தகவல்கள் இங்கே…

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில் 888 பேர், மாநிலங்களவையில் 384 பேர் அமரலாம். கூட்டுக் கூட்டத்தின்போது மக்களவையில் 1,224 பேர் அமர முடியும். இந்தக் கணக்கீடுகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்பதற்கான சமிஞ்கைதான். அப்படி உயரும்போது தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த அச்சம் சுமார் 50 ஆண்டுகளாக நீடித்துவருகிறது. தற்போது, மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 81, ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறது: ஒரு மாநிலத்தில் ஒதுக்கப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கைக்கும் அந்த மாநிலத்தின் மக்கள்தொகைக்கும் இடையேயான விகிதமானது, முடிந்த அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

அதேபோல, அரசமைப்புச் சட்டக் கூறு 81-இன் 3ஆவது பிரிவு, மக்கள்தொகை அடிப்படையில் உறுப்பினர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறது. அதாவது, நாடாளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இருக்க வேண்டும். ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் அந்த எண்ணிக்கை மாறிக்கொண்டே வந்திருக்க வேண்டும். ஆனால், 1971-க்குப் பிறகு இது சாத்தியமாகவில்லை.

எனில், உறுப்பினர்கள் எண்ணிக்கை நிச்சயம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளாக ஏன் உயர்த்தப்படவில்லை என்ற கேள்விக்கும் விடை தேட வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கவே செய்தது.

இப்போது உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 1971 மக்கள்தொகை (56 கோடி) கணக்கெடுப்பின்படியானது. அதன்பிறகு, எம்.பிக்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு இந்திய மாநிலங்கள் மாறுபட்ட விகிதங்களில் வளர்ச்சியடைந்ததே முக்கியக் காரணம். மக்கள் தொகையில் தென்னிந்திய மாநிலங்கள் மெதுவாகவும் வட இந்திய மாநிலங்கள் சில அதிவேகமாகவும் வளர்ச்சி அடைந்தன. இந்த ஏற்றத்தாழ்வு விகிதமே தொகுதி மறுசீரமைப்புக்குத் தடைக்கல்லாக நீடிக்கிறது. 1970-களுக்குப் பிறகு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இந்தியாவில் வேகம் பிடித்தன.

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்

இதன்படி, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுத்தின. ஆனால், வட இந்தியாவில் சில மாநிலங்களைத் தவிர்த்து, மற்றவை இத்திட்டத்தில் முனைப்புக் காட்டவில்லை. எனவே, மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தென்னிந்திய மாநிலங்களில் குறைந்தது; வட இந்தியாவில் அதிகரித்தது.

இதன்படி தொகுதிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டால், வட இந்தியாவில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உருவானது. தென்னிந்தியாவில் குறையும் சூழல் ஏற்பட்டது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்குத் தண்டனை; அதைச் செயல்படுத்தாத வட இந்திய மாநிலங்களுக்குப் பரிசு என்ற முரணான நிலை உருவானது. இதைத் தென்னிந்திய மாநிலங்கள் எதிர்த்தன. இது அரசமைப்பின் 81 ஆவது கூறுக்கும் எதிராக இருந்தது.

எனவே, தொகுதிகள் மறுவரையறை, மக்கள் தொகை எண்ணிக்கைப்படி உறுப்பினர்கள் இருக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை 1976 ல் கைவிடப்பட்டது. அந்த நடவடிக்கையை நெருக்கடிநிலை அமலில் இருந்த காலகட்டத்தில், 25 ஆண்டுகளுக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஒத்திவைத்தார். இதற்காக அரசமைப்புச் சட்டம் 42 ல் திருத்தம் செய்யப்பட்டது. 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு இதைப் பார்த்துக்கொள்ளலாம் என்பது கணக்கு. அதற்குள் சீரான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சாத்தியமாகும் என்று நம்பப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.

2002 ல் வாஜ்பாயும் இந்திரா காந்தியைப் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. 2001 ல் மக்கள்தொகை 102 கோடி. அதன்படி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய முடிவெடுத்தால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் மாறாமல் இருந்தது. எனவே, 2003 ல் வாஜ்பாய் அரசு அரசமைப்புச் சட்டக் கூறு 84இல் திருத்தம் செய்து, அந்த நடவடிக்கையை 2026 வரை ஒத்திவைத்தது. என்றாலும் 2002 ல் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, மக்களவை, மாநில சட்டமன்றங்களின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை மாறாமல், தொகுதிகளின் எல்லைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டன.

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version