Amazing Tamilnadu – Tamil News Updates

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 ஆவது பதக்கம்; சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மனுபாக்கர் புதிய சாதனை!

லகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து 117 வீரர்-வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்க சென்றனர்.

இந்த போட்டியின் 3 ஆவது நாளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார்.

இந்தியாவுக்கு 2 ஆவது பதக்கம்

இந்த நிலையில், 5 ஆவது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவுக்கான வெண்கல பதக்கப் போட்டியில் தகுதி சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் சரப்ஜோத் சிங் – மனு பாக்கர் இணை, தென் கொரியாவின் ஜின் ஓ யே – வோன்ஹோ லீ ஜோடியை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய இணை, 16-10 என்ற கணக்கில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இது நடப்பு தொடரில் இந்தியாவின் 2 ஆவது பதக்கம் ஆகும். மேலும் இந்தியா வென்ற இந்த 2 பதக்கங்களிலும் மனு பாக்கர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனு பாக்கர் & சரப்ஜோத் சிங்

மனு பாக்கர் வரலாற்று சாதனை

124 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில், ஒரே ஒலிம்பிக் பதிப்பில், இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.

மேலும், 2004 ஏதென்ஸில் சுமா ஷிரூருக்குப் பிறகு, 20 ஆண்டுகளில் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் இறுதிப் போட்டியில் நுழைந்த முதல் இந்தியப் பெண், ஏர் பிஸ்டலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர், இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், ஒலிம்பிக்கில் அணி பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடுதல் ஜோடி (மனு பாக்கர் & சரப்ஜோத் சிங்) தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் ஆகிய பெருமைகளையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.

டேபிள் டென்னிஸில் மணிகா பத்ரா புதிய சாதனை

முன்னதாக இன்று நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில், இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 4-0 என்ற கணக்கில், பிரான்ஸ் வீராங்கனையான ப்ரித்திகா பவடேவை வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் முன் காலிறுதிக்கு(pre-quarterfinals) செல்வது இதுவே முதல்முறையாகும்.

Exit mobile version