பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றதன் மூலம் 140 கோடி இந்தியர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.
நேற்று நடந்த இறுதிச்சுற்றில் அவர் மொத்தம் 221.7 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இரண்டாவது இடத்தில் இருந்த மனு பாக்கர் இறுதி நொடியில், கொரிய வீராங்கனையால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 0.1 புள்ளி குறைவாக 221.7 புள்ளிகள் எடுத்து வெண்கலம் வென்றார்.
இந்தப் போட்டியில் தென் கொரிய வீராங்கனை ஓ யீ ஜின் 243.2 புள்ளிகள் சேர்த்து தங்கமும், மற்றொரு தென் கொரிய வீராங்கனை கிம் யெஜி 241.3 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாக்காக முதல் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த மனு பாக்கருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
14 வயதிலேயே துப்பாக்கி பிடித்த மனு பாக்கர்
இளம் வயதிலேயே துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்துள்ள மனு பாக்கர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். குத்துச்சண்டைக்கும், மல்யுத்தத்திற்கும் புகழ்பெற்ற ஹரியானாவில் மனு பாக்கர் டென்னிஸ், ஸ்கேட்டிங் மற்றும் பாக்ஸிங் கற்றுக் கொடுக்கும் பள்ளியில் பயின்றார். தற்காப்பு கலையில் தேசிய அளவில் பதக்கம் வென்றுள்ளார். 2016 ல் தந்தையின் ஆசியோடு கைகளில் துப்பாக்கி பிடித்தார். அப்போது அவருக்கு 14 வயது. துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுக்கத் தொடங்கிய ஒரு வருடத்திலேயே முன்னாள் நம்பர் 1 வீராங்கனை ஹீனா சித்துவை தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வீழ்த்தினார்.
16 ஆவது வயதில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை, மூன்று முறை உலக சாம்பியன் ஆகியோரை வீழ்த்தி தங்கம் வென்று சர்வதேச களத்தில் தடம் பதித்தார். 2018 ல் காமன்வெல்த் போட்டிகள், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், இளையோருக்கான ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை வசப்படுத்தினார்.
டோக்கியோவில் கை நழுவியது பாரிஸில் கிடைத்தது
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மனு பாக்கர் பதக்கம் வெல்வார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். துப்பாக்கியில் கோளாறு ஏற்படவே அதை சரிசெய்வதற்கு நேரம் எடுத்துக்கொண்டதால், அடுத்த 44 குண்டுகளை சுடுவதற்கு 36 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. இதனால் தகுதிச் சுற்றுடன் வெளியேறினார். கலப்பு 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலிலும், 25 மீட்டர் பிரிவிலும் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டார். நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட சோக முகத்தோடு களத்தில் இருந்து மனு பாக்கர் வெளியேறினார்.
டோக்கியோ நிகழ்வு அவரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவருக்குள் துயரத்தையும் மன வேதனையையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், 2023 ஆம் ஆண்டில் அவருக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி என்பது 9 முதல் 5 வேலை போல சலிப்பு தட்டியது. இதனால், அந்த விளையாட்டை விட்டுவிட்டு வெளிநாட்டில் உயர் கல்வி கற்க செல்லலாமா என நினைத்தார். ஆனாலும், அந்த எண்ணத்தை மனதில் இருந்து அகற்றிவிட்டு, மீண்டும் சாதித்துக் காட்ட வேண்டும் என மனதுக்குள் சபதம் ஏற்றார்.
உடனே தனது முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவை மனு தொலைபேசியில் அழைத்தார். அவள் மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்தார். ராணா ஒப்புக்கொண்டார். இருவரும் தங்களுக்கு இடையேயான மனஸ்தாபங்களை ஒதுக்கிவைத்தனர். ராணாவின் வழிகாட்டலில் மனுவுக்குள் அணைந்திருந்த அந்த நெருப்பு மீண்டும் பற்றி எரிந்து, தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை குவித்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தயாராகி, தற்போது பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.