Amazing Tamilnadu – Tamil News Updates

பாரிஸ் ஒலிம்பிக்: வினேஷ் போகத் தகுதி நீக்கம்… ஓய்வு அறிவிப்பு… உருக்கம்… ஆறுதல்! – நெகிழ்ச்சியான 24 மணி நேர நிகழ்வுகள்!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான தங்கப் பதக்கப் போட்டியில், அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததற்காக, இறுதிப் போட்டியில் இருந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து நடந்த கடந்த 24 மணிநேர நிகழ்வுகள் இந்தியர்களை கண்ணீர் விட வைத்துள்ளது.

ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்

தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து மிகவும் மனம் உடைந்து போன வினேஷ் போகத், மிகுந்த உருக்கத்துடன் தனது X சமூக வலைதளத்தில், “அம்மா, என்னை மன்னியுங்கள். மல்யுத்தம் என்னை வென்றது, நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் உடைந்துவிட்டது. சண்டையிட எனக்கு தெம்பில்லை” எனப் பதிவிட்டு, மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்திய ஒலிம்பிக் சங்கம், வினேஷின் விவகாரத்தை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்திடம் (சிஏஎஸ்) முறையிடுவதற்காக கொண்டு சென்ற சில மணிநேரத்திலேயே அவர் வெளியிட்ட இந்த ஓய்வு அறிவிப்பு இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.

பிரபலங்கள் ஆறுதல்

வினேஷ் போகத் இந்தியாவின் பெருமை என்றும், அவர் சாம்பியன்களின் சாம்பியன் என்றும் பிரதமர் மோடி ஏற்கெனவே ஆறுதல் கூறி வாழ்த்தி இருந்த நிலையில், இது தொடர்பாக மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபல நடிகர், நடிகைகள், சக ஒலிம்பிக் போட்டியாளர்கள் எனப் பலரும் அவருக்கு ஆறுதலும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, டாப்ஸி, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் ஆறுதல் தெரிவித்து, தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் பாலிவுட் திரைப்பிரபலங்களான கரீனா கபூர், விக்கி கௌஷல், ப்ரீத்தி ஜிந்தா, அலியா பட் ஆகியோரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

மலையாள நடிகர் மோகன் லால், “நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடினமான வீழ்ச்சியிலிருந்தும் சாம்பியன்கள் எழுவார்கள். நீங்கள் உண்மையான போராளி. இந்தியா உங்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறது” என ஆறுதல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா, “வினேஷ் தோற்கவில்லை ஆனால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளார். விளையாட்டு அமைப்பு தோற்றுவிட்டது. தங்கம் வென்றவருக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் அரசு அவருக்கு வழங்க வேண்டும். இன்று ராஜ்யசபையில் இடம் காலியாக உள்ளது எங்களிடம் (ஹரியானாவில்) பெரும்பான்மை இல்லை; ஆனால் எம்.பி. ஆக தகுதியான நபர் யாராவது இருந்தால் அது வினேஷ் தான். ஏனென்றால் அவர் உலகிற்கும் நாட்டிற்கும் உத்வேகம், தைரியத்தின் சின்னமாக உருவெடுத்துள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை

வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு முன்பாக உடல் எடையைக் குறைக்க கடும் உடற்பயிற்சியை மேற்கொண்டதின் காரணமாக நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு
மயங்கியுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

எதனால் தகுதி நீக்கம்?

இறுதிப்போட்டியான நேற்றைய நாளுக்கு முன்பாக நடந்த பரிசோதனையின் போது வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோவை விட 100 கிராம் அதிகமாக இருந்தது தெரிய வந்திருக்கிறது. போட்டிக்கு முன்பாக ஒவ்வொரு நாளும் வீரர் வீராங்கனைகளின் எடை சரிபார்க்கப்படும்.

நேற்று முன்தினம் தான் வினேஷ் தனது ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி என 3 போட்டிகளில் ஆடியிருந்தார். இந்தப் போட்டிகளுக்கு முன்பாக பரிசோதிக்கையில் சரியாக 50 கிலோ எடையே இருந்திருக்கிறார். ஆனால் போட்டிகளுக்குப் பிறகு பரிசோதிக்கையில் 52 கிலோவாக இருந்ததிருக்கிறார். இதனால் ஒரே இரவில் இரண்டு கிலோ எடையைக் குறைக்க வேண்டிய நிலை. இரவு முழுவதும் தூங்காமல் வினேஷூம் எவ்வளவோ கடுமையாகப் பயிற்சிகளை செய்தும் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை.

100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்த எடை சரிபார்க்க வீரர் வீராங்கனைகள் வராமல் இருந்தாலோ, அந்த எடைப்பிரிவிக்கு அதிகமான எடையில் இருந்தாலோ அவர்கள் முழுமையாகப் போட்டியிலிருந்தே தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். மேலும், அந்தத் தொடரின் கடைசி இடம் மட்டுமே அந்த வீராங்கனைக்கு வழங்கப்படும். இதுதான் விதிமுறை. அதன் அடிப்படையிலேயே வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

கை நழுவிய தங்க பதக்கம்

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரையிறுதியில் அவரிடம் 5 – 0 என்ற கணக்கில் தோல்வியடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான், இறுதிப் போட்டிக்கு விளையாட தகுதி பெற்றார். இதனையடுத்து, நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கியூபா வீராங்கனை குஸ்மாயை வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் தங்கம் வென்றார்.

அமெரிக்கா வீராங்கனை பாராட்டு

இந்நிலையில் வினேஷ் போகத் குறித்து தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் மனம் திறந்து பேசியுள்ளார்.

“வினேஷ் போகத்திற்கு நடந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். அந்த நாள் அவளுக்கு ஒரு அற்புதமான நாளாக இருந்தது. அந்த நாளில் அவள் ஒரு அற்புதமான சாதனையை செய்திருந்தாள். ஆனால் அவளின் ஒலிம்பிக் பயணம் இப்படி முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நான் அவளை நினைத்து அனுதாபப்படுகிறேன். நிச்சயமாக, அவள் ஒரு அற்புதமான போட்டியாளர், ஒரு அற்புதமான மல்யுத்த வீராங்கனை மற்றும் நபர் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version